அமிர்தா வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வரும் மாணவர்கள் கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக பொட்டையாண்டிபுரம்பு அடுத்து உள்ள கல்லாபுரத்தில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளித்தனர்.
முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சியில், தேனீ வளர்ப்பு பற்றி பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர், J. அரவிந்த் அவர்களின் உதவியுடன் மாணவர்கள் செயல் விளக்கம் நடத்தினர். தேனீக்களின் வகைகள், இனங்கள், மற்றும் எப்படி வளர்க்க வேண்டும் என்பது போல பல நுணுக்கங்களைத் தேனீ பெட்டி கொண்டு எடுத்துக் கூறினர். தேனீ வளர்க்க பயன்படுத்தும் பல உபகரணங்களையும் விளக்கினர். விவசாயிகள் மத்தியில் தேனீக்களைப் பற்றிய பயம் நீங்க அவர்கள் கையில் தேனீ சட்டத்தைக் கொடுத்து பயத்தைப் போக்கினார். தேனீயின் இனங்களும், அவை செய்யும் பணிகளையும் பற்றி எடுத்துக் கூறினர். தேனீக்களின் ஆயுள் காலம், மற்றும் தேனீக்களால் விவசாயிகளுக்கும் பயிர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவரித்தனர். தேனீக்கள் மகரந்த சேர்க்கை எனும் ஒரு முக்கியமான ஒரு செயலை செய்கின்றன. தேனீக்களின் இன்னும் சில பூச்சிகளும் மட்டுமே செய்யக்கூடிய மகரந்த சேர்க்கை பயிர்களின் இடையே பெரும் பங்கை வகிக்கிறது. தென்னைப் பூக்களில் ஆண் பகுதியும் பெண் பகுதியும் தனித்து இருப்பதால் மகரந்த சேர்க்கையானது காற்றினாலோ பூச்சிகளாலோ தான் நடக்க வேண்டி இருக்கிறது. தென்னை விவசாயிகள் தனது தோட்டத்தில் தேனீ பெட்டி வைப்பதனால் மகரந்த சேர்க்கை அதிகரித்து, விவசாயியின் வருமானம் கூடுகிறது. விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு இறுதியில் கேள்விகளும் கேட்டுப் பயனடைந்தனர்.
இதன் பின்னர், அங்கு தென்னை விவசாயிகள் அதிகம் உள்ளதால் தென்னையில் ஊடுபயிர் செய்வது குறித்த விழிப்புணர்வை முனைவர். பிரியா (தோட்டக்கலை உதவிப் பேராசிரியர்) அவர்களின் உதவியடன் மாணவர்கள் எடுத்துரைத்தனர். தென்னை மரங்களுக்கு இடையே உள்ள இடத்தில் லாபகரமாக பயிர் செய்து வருமானத்தை கூட்டுவது குறித்து அங்கு விளக்கினர். வேலை செய்ய ஆட்களும் பாய்ச்ச தண்ணீரும் உள்ள விவசாயிகளுக்கு ஏற்ற பயிர்களைப் பற்றியும், தண்ணீரும் ஆட்களும் இல்லாத விவசாயிகளுக்கு ஏற்ற பயிர்களைப் பற்றியும் வெகுவாக எடுத்துரைத்தனர். தென்னைக்கு நடுவில் கோகோ (cocoa) ஊடுபயிர் பற்றி கூறும்போது விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் தரக் கூடிய ஒரு ஊடுபயிர் கோகோ. கோகோ வாங்கும் மற்றும் விற்கும் வழிகள் மற்றும் முறைகள் எல்லாம் கேட்டுத் தெரிந்துக் கொண்டனர் விவசாயிகள். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று விவசாயிகள் கூறினார்கள். இத்துடன் நிகழ்ச்சியின் முடிவில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி முழுவதும் நடத்தி முடிக்க விதைத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். மார்த்தாண்டன் உடனிருந்து உதவினார். நிகழ்ச்சியை நடத்த முனைவர். சுதீஷ் மணலில் (கல்லூரி முதல்வர்), முனைவர். சிவராஜ், மற்றும் முனைவர். சத்திய பிரியா ஆகியோர் வழிகாட்டினர்.
மேலும் படிக்க:
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
Share your comments