1. கால்நடை

பசுந்தீவனப் பயிர்கள் உற்பத்தி

KJ Staff
KJ Staff

கால்நடைகளைச் சிறப்பாகப் பராமரிக்கவும், அதிக வருமானம் பெறவும் தரமான தீவனப்பயிர்களை உற்பத்தி செய்வது மிகவும் அவசியம். பசுந்தீவனத்தைப்பயிர் செய்வதன் மூலம் மண் வளம், மண்ணின் நீர் தாங்கும் சக்தி அதிகரிக்கப்படுகிறது. களை, உபயோகமற்ற புல் மற்றும் பூண்டுகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. பயறு வகைத் தீவனப்பயிர்களை வளர்ப்பதன் மூலம் மண்ணின் சத்துகள் குறிப்பாக தழைச்சத்து பெருகுகிறது.

  • இலாபகரமான பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்குப் புரதச்சத்து மிகுந்த பயிறு வகைத்தீவனங்களை அளிப்பது அவசியமாகிறது. புல் மற்றும் தானிய வகைத் தீவனங்களுடன் பயிறுவகைத் தீவனங்களைக் கொடுப்பதன் மூலம் அடர்தீவனம் அளிப்பதற்கான செலவைக் குறைக்கலாம்.

தீவனப்பயிர்கள் உற்பத்திக்கான வழிமுறைகள்

  • குறைந்த நிலப்பரப்பில் அதிக மகசூல் தரக்கூடிய தீவனப்பயிர் ரகங்களைத் தேர்வு  செய்ய வேண்டும்.
  • இறவை மற்றும் மானாவாரிக்கு ஏற்ற தீவனப்பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும்.
  • மண்பரிசோதனை செய்து, அதற்கேற்ற தீவனப்பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும்.

பசுந்தீவனப் பயிர்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்

  • புல் வகைத் தீவனம்
  • தானிய வகைத் தீவனம்
  • பயிறு வகைத் தீவனம்
  • மரவகைத் தீவனம்

புல்வகைத் தீவனங்கள்

இறவைப் பயிர்கள்: கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல்

மானாவாரிப் பயிர்கள்: கொழுக்கட்டைப்புல், தீனாநாத் புல்

 

தானியவகைத் தீவனங்கள் 

இறவைப் பயிர்கள்: தீவன மக்காச்சோளம், தீவனச்சோளம்,  தீவனக்கம்பு
மானாவாரிப் பயிர்கள்: தீவனச்சோளம், தீவனக்கம்பு.

பயிறுவகைத் தீவனப்பயிர்கள் 

இறவைப் பயிர்கள்: வேலிமசால், குதிரைமசால், தட்டைப்பயிறு, கொத்தவரை, சோயாமொச்சை, சென்ட்ரோ 

மானாவாரிப் பயிர்கள்: வேலிமசால், முயல்மசால், டெஸ்மோடியம், சிராட்ரோ, சங்கு புஷ்பம்

குறுகியகாலப் பயிர்கள்: துவரை, கொள்ளு, அவரை, தட்டைப்பயிறு, கொத்தவரை.

 

மாற்றுத்தீவனம் - அசோலா

தற்போது குறைந்த மழை அளவு உள்ளதாலும், விவசாய நிலங்கள் குறைந்து வருவதாலும், மாற்றுத்தீவனங்களைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்தினால் தீவனத்தட்டுப்பாட்டைக் குறைப்பதோடு தீவனச் செலவையும் குறைக்கலாம். அசோலா இரசாயன உரமில்லாத ஒரு மாற்றுத்தீவனமாக விளங்குவதால், அனைத்து வகைக் கால்நடைகளுக்கும் இது ஒரு சீரான தீவனமாக அமைகிறது.

கால்நடைத்தீவனத்தில் சேர்க்கப்படும் மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற தானிய வகைகள், பிண்ணாக்கு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால் கால்நடை மற்றும் கோழித் தீவனச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகவே புரதச்சத்து மிகுந்த அசோலாவை கால்நடை மற்றும் கோழிகளுக்கு நிரந்தர மாற்றுத் தீவனமாகப் பயன்படுத்தி, உற்பத்திச்செலவினை கணிசமாகக் குறைக்கலாம். இது நெற்பயிருக்கு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அசோலாவிலுள்ள சத்துகள்

  • அசோலாவில் 25-30% புரதச்சத்து,
  • 14-15% நார்ச்சத்து,
  • 3-4% கொழுப்புச்சத்து,
  • 45-50% மாவுச்சத்து,
  • தாது உப்புகள் மற்றும்
  • பல நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளது. 

 

உற்பத்தி முறைகள்

  • அதிக ஆழமில்லாத நீர் தேங்கும் குட்டைகள், நெல்வயல்/ நெல் நாற்றங்கால்
  • சிமெண்ட் தொட்டிகள்
  • சில்பாலின் சீட் விரிக்கப்பட்ட குழிமுறை

நெல் வயலில் அசோலாவை ஒரு சென்ட் நிலத்திற்கு ஒரு கிலோ என்ற விகிதத்தில் இட்டு சுமார் 5 செ.மீ. நீர் நிறுத்தினால், இரண்டு வார காலத்திற்குள் அந்த இடம் முழுவதும் வளர்ந்து விடும்.

சிமெண்ட் தொட்டி முறை

10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட சிமெண்ட் தொட்டியில் 25-30 கிலோ மண்ணைப் பரப்பி அதனுடன் 5 கிலோ மக்கிய சாணத்தைக்கலந்து, அதனுடன் பாறைகளை உடைக்குமிடம் அல்லது ஆழ்குழாய்க் கிணறு போடுமிடம் ஆகியவற்றில் கிடைக்கும் மண் 100 கிராம் கலந்து கொள்ளவும். நீரின் அளவு 5 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் 5 கிலோ அசோலாவை இட்டால் இரண்டு வாரங்களில் சுமார் 35-40 கிலோ அசோலாவை சேகரித்து எடுக்கலாம். 10 நாளுக்கு ஒருமுறை சாணக்கரைசலை ஊற்ற வேண்டும். 


அசோலா ஒரு உயிர் உரம்

காற்றில் இருக்கும் தழைச்சத்தினைக் கிரகிக்கும் திறனுடையது. இதில் 4.5 சதவிகிதம் தழைச்சத்து உள்ளது. ஆகவே நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 200 கிலோ இடலாம். இதனால் பயிருக்கு தழைச்சத்து கிடைப்பதோடு 15-20% மகசூலும் உயர்கிறது.

English Summary: Production of green crops Published on: 26 September 2018, 11:27 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.