தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் 2023-ல் விவசாயம் சார்ந்த பல செயல்பாடுகளுக்குப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது. அதோடு, பிற திட்டங்கள் குறித்தும் இப்பதிவு விளக்குகிறது.
திமுக அரசு ஆட்சியில் பொறுப்பேற்ற பின்பு வேளாண் நிதிநிலை அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது. 2023 -24 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.
ஆடு - மாடு பண்ணை வளர்ப்பு நிதி
மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் விதை திருவிழா நடத்தப்பட இருப்பதுடன், ஆடு, மாடு, தேனிவளர்ப்புக்கான ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் விவசாயகள் தங்களின் விவசாய உற்பத்தியினைப் பெருக்கும் வகையில் கால்நடைகளை வளர்த்துப் பயன்பெறலாம். கால்நடைகளைப் பெறுவதற்கும், கால்நடைகளுக்கான தீவனப் புல் வளர்க்கவும், அவற்றை பராமரிக்கும் பண்ணைகள் அமைப்பதற்கும் இந்த தொகை வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
பண்ணை வளர்ப்பு நிதியினைப் போலவே, விவசாயிகள் தங்களில் வயல்பரப்புகளில் மரங்களை வளர்க்க மரக்கன்றுகள் வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, 10 லட்சம் விவசாயிகளுக்கு மா, பலா, கொய்யா கன்று இலவசமாக வழங்கப்பட உள்ளது. அதோடு, ஏற்காடு அரசு தாவரவியல் பூங்கா மேம்படுத்த ரூ.5 கோடி அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது
பட்டதாரி மாணவர்களுக்குக் கடன்
விவசாயத்தை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் 200 வேளாண் பட்டதாரிகளுக்கு வேளாண்மை சார்ந்த தொழில் தொடங்குவதற்குத் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 200 பேருக்கு கடன் வழங்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். இதற்கு எனத் தமிழக அரசு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இதன் கீழ் முன்னரே 185 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் வேளாண் கிளினிக்குள் தொடங்க ஊக்குவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிறுதானியங்கள் உறிபத்தி செய்ய மானியம்
வருகின்ற ஆண்டில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளில் தென்னை மரம் இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 வீதம் தென்னை மரங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 15 லட்சம் தென்னை மர கன்றுகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நாமக்கல், திருப்பூர், கோவை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிதாகச் சிறுதானிய மண்டலம் உருவாக்கப்பட இருப்பதாகவும், கேழ்வரகு, கம்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் எனவும் கூறப்படுள்ளது.
மேலும், 50,000 ஏக்கரில் சிறுதானிய உற்பத்திக்கு மானியம் வழங்கப்பட இருக்கிறது. சிறுதானிய மானியத்தால் சிறுதானியங்களின் வளர்ப்பு அதிகரிக்கும். இவ்வதிகரிப்பால் ஏற்பட்ட அதிக அளவிலான சிறுதானியங்களைப் பாதுகாக்கச் சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், சிறுதானிய உற்பத்தியினை அதிகரிக்க ரூ. 82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுதானிய திருவிழாக்கள் வரும் ஆண்டு நடத்தப்பட இருக்கின்றன என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்மாழ்வார் பெயரில் ரூ.5 லட்சம் விருது
அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கெனத் தமிழக அரசின் சார்பாக நம்மாழ்வார் பெயரில் விருது, 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பாராட்டு பத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரொக்கப்பரிசும், சான்றிதழும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கெனச் சிறப்பு திட்டம் அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு, 300 ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளின் வயல்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவை முதலாக பல்வேறு வேளாண் திட்டங்கள் சார்ந்த பல திட்டங்களும், அவற்றிற்கு அரசு ஒதுக்க இருக்கும் தொகையும், தமிழக வேளாண் பட்ஜெட் 2023-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் விரைவில் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
ஒருமுறை விவசாயம் செய்து 70 ஆண்டுகள் வரை சம்பாதிக்க முடியும்
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறை - வேளாண் மாணவர் விளக்கம்
Share your comments