உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் அனைத்து நாடுகளிலும் வர்த்தகம் முற்றிலும் முடங்கி இருக்கிறது. இதில் இந்தியாவும் விதிவிலக்கு இல்லை, கடந்த இரண்டு மாதமாக பொது முடக்கம் தொடர்ந்து அமலில் உள்ளதால், தொழிற்சாலைகள், சந்தைகள், போக்குவரத்துறை என அனைத்து துறைகளும் செயலற்று கிடக்கின்றன.
வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக, போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் விலைபொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
மிகப் பெரிய பொருளாதார சரிவு சந்தித்துள்ள இந்தியாவின் நிலையை மீட்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆத்மநிர்பர் அபியான் திட்டத்தின் ( Atmanirbhar Abhiyan Scheme)கீழ் பல்வேறு கட்டமாக மத்திய அரசின் புதிய நிதித் திட்டங்களை அறிவித்தார் . இதன் 3-ம் கட்ட அறிவிப்பில் விவசாயம், கால்நடை, பால் வளம் மற்றும் மீன்வளம் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார் .
இதில் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் (Essential Commodities Act ) திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை ஆகியவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றார்.
மேலும், ஒரு முக்கிய அறிவிப்பாகத் தேனீக்கள் வளர்ப்பிற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். அவரைத்தொடர்ந்து, இந்த திட்டத்தின் முக்கியத்துவம் குறத்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்துள்ளார். அதில்,
தேனீ வளர்ப்பில் இந்தியா
உலகளவில் தேனீக்கள் உற்பத்தியில் இந்தியா முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இருப்பதாகவும், தேனீகள் வளர்ப்பில் முதலீடு குறைவாகவும் அதிக வருமானமும் கிடைப்பதால் சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட தேனீ வளர்ப்பை மேற்கொள்ளமுடியும் என்று கூறினார்.
கடந்து 15 ஆண்டுகளில் இந்தியாவில் தேனீகள் உற்பத்தி 242 சதவீதம் அதிகரித்து, தேன் ஏற்றுமதியில் இந்தியா 265 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது இந்தியத் தேனீக்களின் சந்தை மதிப்பு 500 மில்லியன் டாலர், இது வருகிற ஐந்து ஆண்டுகளில் 1100 மில்லியன் டாலருக்கு அதிகமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
2024ம் அண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் தற்போதைய தேனீ வளர்ப்பு திட்டம் முக்கிய அம்சம் பெறுகிறது.
தேனி வளர்ப்பின் முக்கியத்துவம்
தேனீக்கள் வேளாண்மையின் தேவதைகள். வேளாண்மை, நாட்டிற்கு முதுகெலும்பு என்றால் வேளாண்மைக்கு அவசியம் தேனீக்கள் தான்.
எல்லா பூச்சிகளும் ஒரு மரத்தில், செடியின் பூவில் உள்ள மகரந்தத்தை எடுத்து இன்னொரு செடியில் கொண்டு போய் வைத்துவிடும். அதனால், மகரந்த சேர்க்கைக்கு அவைகள் உதவாது. ஆனால்,தேனீக்கள் மட்டுமே,காலையில் ஒரு மரத்திற்குச் சென்றால் அந்த மரத்தின் பூக்களை மட்டுமே சுற்றும். அந்த மரத்தின் மகரந்தத்தை எடுத்து முடித்தபிறகே அடுத்த செடிகளுக்குப் போகும்.தேனீக்கள் ஒரே பூவை தொடர்ந்து சுற்றுவதால் அந்த செடிகளின் அயல் மகரந்த சேர்க்கைக்கு அவைகள் உதவுகிறது. இந்த பணியை வேற எந்த பூச்சிகளும் செய்யமுடியாது. தேனீக்கள் இனம் அழிந்துவிட்டால் மனித இனம் மறைந்துவிடும். ஏற்கனவே 60 சதவீதம் தேனீக்கள் மாண்டு விட்டன. தற்போது குறைந்த சதவீத தேனீக்களைக் கொண்டுதான் விவசாயம் செய்கிறோம். மகரந்த சேர்க்கையை செயற்கையாக உருவாக்க முடியாது என்பதால் தேனீக்கள் இடத்தை எந்த தொழில் நுட்பத்தாலும் நிரப்ப முடியாது என்பதே உண்மை.
தற்போது, மத்திய அரசு இந்த ரூ.500 கோடி திட்டத்தைத் தேன் மற்றும் தேனீக்கள் உற்பத்திக்காக மட்டுமே ஒதுக்கவில்லை. அதன் பின்னணியில் வேளாண்மை மேம்படுத்தும் திட்டமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share your comments