1. கால்நடை

கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

KJ Staff
KJ Staff
  • வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள சூழ்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இப்படிப் பருவம் மாறும் சூழ்நிலைகளில் கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
  • பொதுவாகக் குளிர்காலத்தில் கன்றுகளின் உடல் வெப்பநிலை சற்று அதிகமாகவும், கோடைக்காலத்தில் சற்றுக் குறைவாகவும் இருக்கும். இது இயல்பான விஷயம் என்பதால், கவலைபடத் தேவையில்லை.
  • மூன்று வயது வரையுள்ள எருமைக் கன்றுகள், அதிகக் குளிரைத் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அதனால், கொட்டகையில் அதிகக் குளிர் தாக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  • குளிர்காலத்தில் நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள் மற்றும் ஓரணு ஒட்டுண்ணிகள் ஆகியவை தொற்ற வாய்ப்புகள் உண்டு. ஈ, கொசு போன்ற பூச்சியினங்களும் இக்காலத்தில் அதிகமாகப் பெருகி, நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். அதனால், கால்நடை வளர்ப்போர் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து, மழை மற்றும் குளிர்காலப் பிரச்னைகளிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • கொட்டகைக்குள் மழைநீர் ஒழுகாதவாறு மேற்கூரையைச் சரிசெய்ய வேண்டியது அவசியம். கொட்டகைக்குள்ளும், கொட்டகைக்கு வெளியேயும் மழைநீர் தேங்காதவாறு வடிகால் இருக்க வேண்டும்.
  • மழைநீர் தேங்கினால் ஈக்கள் மற்றும் கொசுக்கள் பெருகும். கொட்டகையில் சாணம் மற்றும் மாட்டுச்சிறுநீருடன் மழைநீர் சேர்ந்தால், அம்மோனியா வாயு உற்பத்தியாகி காய்ச்சல், சளி போன்ற நோய்கள் உருவாகும். இவைதவிர, கறவை மாடுகளுக்கு மடிவீக்க நோயும் ஏற்படும்.
  • இதனால், சாணம் மற்றும் சிறுநீரும் கொட்டகைக்குள் இல்லாதவாறு சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். உலர்ந்த வைக்கோல் அல்லது சணல் சாக்குப் பைகளைக் கொட்டகையின் தரையில் பரப்பினால், தரைப்பகுதி வெப்பமாக இருக்கும்.
  • இளம் கன்றுகள், ஆட்டுக்குட்டிகள், கோழிக்குஞ்சுகள் ஆகியவற்றைக் குளிர்ந்த காற்று தாக்காதவாறு கொட்டகையின் பக்கவாட்டில் ஓலைத்தடுப்பு, சாக்குப்பை, தார்பாலின் ஷீட் போன்றவற்றைக் கொண்டு மறைத்து, கொட்டகைக்குள் வெப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
  • பகல்நேரத்தில் அவற்றை அகற்றி, கொட்டகைக்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். காற்றோட்டம் இல்லாவிட்டாலும் சில நோய்கள் வரக்கூடும்.
  • மழைக்காலத்தில், தண்ணீரால் பரவும் நோய்க்கிருமிகளைத் தடுக்க, கொதிக்க வைத்து ஆறிய நீரையே பருக கொடுக்க வேண்டும். தேங்கிய நீரில் நுண்கிருமிகள் இருக்கும் என்பதால், குளம், குட்டைகளில் நீரை எடுப்பதைத் தவிர்த்து கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் எடுத்த நீரை மட்டுமே கால்நடைகளுக்குக் குடிக்கப் பயன்படுத்த வேண்டும்.
  • குடிநீர்த் தொட்டி மற்றும் தீவனத்தொட்டிகளைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் வாரம் ஒருமுறை சுண்ணாம்புப்பொடி பூசி, காயவிட்டுப் பிறகு பயன்படுத்த வேண்டும். 
  • குளிர்காலத்தில் கோழிகள் குறைந்தளவு தண்ணீரையே அருந்தும். தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தால், குடிக்கும் நீரின் அளவும் குறையும் என்பதால், கோழிகளுக்கு வெதுவெதுப்பான நீரைக் (அதிகச் சூடாக இருக்கக்கூடாது) கொடுக்க வேண்டும்.
  • மழைக்காலத்தில் அதிகளவில் கால்நடைக்கான தீவனத்தைச் சேமித்து வைக்கக் கூடாது. குளிர் மற்றும் மழைக்காலத்தில் தரையில் அதிக ஈரப்பதம் இருப்பதால் குறைந்தபட்சம் ஓர் அடி உயரத்துக்கு மரக்கட்டைகளை அடுக்கி, அவற்றின்மேல் தீவன மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.
  • தீவனத்தைச் சேமித்து வைக்கும் அறை, நல்ல காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் ஈரக்கசிவில்லாமல் இருக்க வேண்டும்.
  • பூஞ்சணம் தாக்கிய தானியங்களைக் கொண்டு தீவனம் தயாரிக்கக் கூடாது. அதேபோல் தயாரித்து வைத்த தீவனத்திலும் பூஞ்சணத்தாக்குதல் இருக்கக் கூடாது.
  • பூஞ்சணத்தாக்குதல் இருந்தால் அவற்றைச் சாப்பிடும் கால்நடைகளின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்படும். எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி பூஞ்சணத்தடுப்பு மருந்து மற்றும் ஈரல் நோய்த் தடுப்பு மருந்துகளைத் தீவனத்துடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
  • பசும்புல் தாராளமாகக் கிடைக்கிறதே என்று கறவை மாடுகளை அதிகமாகச் சாப்பிடவிட்டால், பால் நீர்த்துப்போகும். பாலின் அளவும் அதிலிலுள்ள கொழுப்பின் சதவிகிதமும் குறையும். அதனால், பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்.
  • சரிவிகிதப்படி உலர் தீவனம், அடர்த் தீவனம் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். உலர் தீவனத்தை ஈரப்படுத்திக் கொடுக்கக் கூடாது.
  • பொதுவாகக் கோழிகளுக்கான தீவனத்தில் தண்ணீர் கலந்து, பிசைந்து கொடுப்பார்கள். குளிர்காலத்தில் அப்படிச்செய்யக் கூடாது.
  • குளிர்காலங்களில் ஈரமான புல்வெளிகள், குளம், குட்டைகளில் பலவிதமான பூச்சிகள் மற்றும் புழுக்கள் இருக்கக்கூடும். அதனால், நல்ல வெயில் அடிக்கும் சமயத்தில்தான் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். இல்லாவிடில், அப்பூச்சிகள் கால்நடைகளைத் தாக்கக்கூடும்.
  • முற்றாத நிலையிலுள்ள இளம் பசுந்தீவனத்தில் ‘ஹைட்ரோசயனிக் அமிலம்’ என்ற நச்சு அதிகமாக இருக்கும். மெக்னீசியம் குறைவாக இருக்கும். அதனால், மழையில் முளைக்கும் புதுப் புற்களைச் சாப்பிட்டால், கால்நடைகளுக்குச் செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், துள்ளுமாரி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், மழைக்காலத்தில் மேய்ச்சலுக்கு அனுப்புவதைக் குறைப்பது நல்லது.
  • வெள்ளாடுகளுக்குக் கொள்ளை நோய்க்கான (பி.பி.ஆர்) தடுப்பூசியையும் செம்மறியாடுகளுக்கு நீலநாக்கு நோய்க்கான தடுப்பூசியையும் போட வேண்டும்.
  • கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல், ரத்தக் கழிச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளைப் போட வேண்டும்.

மழைக்காலமாக இருந்தாலும் சரி, வெயில் காலமாக இருந்தாலும் சரி கொட்டகை சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். வேப்பிலை, நொச்சியிலை ஆகியவற்றைக் கொண்டு புகைமூட்டம் போட்டுக் கொசுக்களை விரட்டினாலே, நிறைய தொற்று நோய்களைத் தடுக்கலாம்.  இக்காலகட்டத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்தநோய் தாக்கினாலும், உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

English Summary: Some precautionary measures to protect livestock from disease Published on: 11 October 2018, 03:10 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.