1. கால்நடை

கோடைக் காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்கள்

KJ Staff
KJ Staff

அடைப்பான் நோய்

கால்நடைகளில் விரைவில் மரணத்தை விளைவிக்கும் அடைப்பான் நோய் பேசில்லஸ் அந்தராசிஸ் எனும் நுண்ணுரியால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் உடல் துவாரங்களில் இருந்து இரத்தக் கசிவு ஏற்படுவதைத் தொடர்ந்து உடனடி மரணம் ஏற்படும். இவ்வாறாக இறந்த கால்நடைகளின் மூலம் இந்நோய் அதிக அளவு பரவ வாய்ப்புள்ளதால், இவற்றை உடனடியாக ஆழ்குழியில் 10 லி சுண்ணாம்பு (அல்லது) சலவை சோடா கரைசலைத் தெளித்துப் புதைத்துவிட வேண்டும். இறந்த கால்நடைகளில் அருகாமையில் இருந்து பிற கால் நடைகளுக்கு முறையான தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.

கோமாரிநோய் (கால்வாய் நோய்)

கோமாரிநோய் மாட்டினங்களை அதிகம் பாதிக்கின்றது. எருமை, வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றை இந்நோய் பாதித்தாலும் இவற்றில் நோய்க்கான அறிகுறிகள் குறைந்த அளவிலேயே வெளிப்படுகின்றன. இந்நோயால் அதிக அளவில் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. ஆண்டிற்கு இரு முறை இந்நோய்க்கான தடுப்பூசியைக் கால்நடைகளுக்கு கட்டாயம் அளிக்கவேண்டும். இந்நோயின் அறிகுறிகளாகக் கால்நடைகளில் வாய், நாக்கு மற்றும் கால் குளம்பு பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படும். கொட்டகைகளில் 10 லி சலவைசோடா அல்லது 0.2 லி சிட்ரிக் அமில கரைசல் ஆகியவற்றைத் தெளிப்பதன் மூலம் நோய் பரவுதலைக் தடுக்கலாம்.

அம்மைநோய்

அம்மை நோயானது மாடு, எருமை, ஆடு மற்றும் கோழியினங்களை தாக்கும்.  நோய்த்தாக்கம் ஏற்பட்ட கால்நடைகளில் காய்ச்சலுடன் சிறுகொப்புளங்கள் காம்புப் பகுதிகளிலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் ஏற்படும். பாதிக்கப்பட்ட மாடுகளை மந்தையில் இருந்து உடனடியாகப் பிரித்துத் தனியாகப் பராமரிக்க வேண்டும். வேப்ப எண்ணெயுடன் மஞ்சள் கலந்து புண்களின் மீது தடவுதலின் மூலம் இந்நோய், ஈக்கள் மூலம் பிறமாடுகளுக்குப் பரவுவதையும் இதர நோய்க்கிருமிகள் தாக்கத்தையும் தவிர்க்கலாம்.

ஆட்டுக் கொல்லைநோய் (பி.பி.ஆர்)

இது செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் தாக்கவல்ல வெக்கை நோயினை ஒத்த ஒரு வகை நச்சுகிருமியால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட ஆடுகளின் காய்ச்சல் மற்றும் மூக்குச் சவ்வு மற்றும் தொண்டைப் பகுதிகளில் அழற்சியும் ஏற்படும். பாதிக்கப்பட்ட ஆடுகள் பெரும்பாலும் சோர்வடைந்து, மெலிந்து நீர்வற்றி மூச்சுக்குழாய் பாதிப்பு மூலம் இறக்க நேரிடும். இந்நோய்க்கான தடுப்பூசி 3-4 மாதத்தில் குட்டிகளுக்கு அளிப்பதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

தொண்டை அடைப்பான் நோய்

தொண்டை அடைப்பான் நோய் மாடுகளையும், எருமைகளையும் தாக்கும்.

கருச்சிதைவு நோய்

கருச்சிதைவு நோயால் (புருசெல்லோசிஸ்) பாதிக்கப்பட்ட கால்நடைகளை மந்தையில் இருந்து அறவே நீக்க வேண்டும். இந்நோய்த் தடுப்பூசி சரியான காலத்தில் அளிக்கப்பட வேண்டும்.   இந்நோய்  மனிதர்களுக்கும்  பரவும்  தன்மை உடையது.

தொற்றும் வாய்ககொப்புளநோய் (ஒர்ப்)

ஆடுகளில் பரவலாகக் காணப்படும் இந்நோய் அம்மை வகையினைச் சார்ந்த ஒருவகை நோய்க் கிருமியினால் ஏற்படுகிறது. இந்நோய்க்கு நம் நாட்டில் தடுப்பு மருந்து இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்ட ஆடுகளை உடனுக்குடன்  தனியே பிரிக்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல்

இந்நோய்க்குப் பன்றிக்காலரா என்ற மறு பெயரும் உண்டு. இது காலரா போன்ற கொடிய நோயாகும். 90 விழுக்காட்டிற்கு மேல் திடீர் இறப்பு ஏற்படும். மேலும் இது தீவிரமாகப் பரவும் தன்மை உடையதால் பாதிக்கப்பட்ட பன்றிகளை உடனடியாக பண்ணைக் கொட்டகைகளில் இருந்து நீக்கம் செய்தல் வேண்டும்.

கால்நடைகளில் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகவும்.  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடைநோய் ஆய்வுக்கூடங்கள், மாதாவரம் பால்பண்ணை, நாமக்கல், தலைவாசல் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ளன. இவை மட்டுமேயன்றித் தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத்துறையின்  கால்நடை நோய்ப் புலனாய்வு பிரிவு எல்லா மாவட்டத் தலைநகரிலும் இயங்கிவருகிறது. இவ்வனைத்துப் பிரிவுகளும் நோய் காரணிகளைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சையைப் பரிந்துரைக்கத் தயார் நிலையில் உள்ளன. கால்நடைப் பண்ணையாளர்கள் மேற்குறிப்பிட்ட நோய் ஆய்வுக்கூடங்களையோ அல்லது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களைத் தொடர்பு கொண்டு தக்க ஆலோசனைகளை பெறலாம்.

English Summary: Summer season disease management for Livestocks Published on: 13 November 2018, 04:50 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.