கிராமங்களில் நாட்டுக் கோழிகள் முறையான பராமரிப்பின்றி புறக்கடை முறையில் வளர்க்கப்படுகின்றன. அடைவதற்கு இடவசதி இல்லாததால் இளங்குஞ்சுகளை காகம், பருந்து, வல்லூறு, நாய் மற்றும் பூனைகள் பிடித்துச் செல்வதாலும், நோய் தாக்குதலாலும் பொருளாதார இழப்பு (Economical Loss) ஏற்படுகின்றன.
கூண்டு முறை
எளிய கூண்டு முறையில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பது லாபமான செயல். 6 அடி நீளம், 4 அடி அகலம், 2 முதல் 3 அடி உயரம் கொண்ட அரை அங்குல வெல்டு கம்பிகளால் ஆன கூண்டு அமைக்க வேண்டும். இதை இரும்பினால் ஆன சட்டத்தில் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் பொருத்த வேண்டும். கூண்டிற்கு அரை அடி கீழே கோழியிடும் எச்சத்தைச் சேகரிக்க தட்டு வைக்க வேண்டும்.
நீள, அகலத்தின் நடுவில் தடுப்பு கம்பி பொருத்தி 4 அறைகளாகப் பிரித்து கம்பிவலை கதவுடன் தாழ்ப்பாள் வைக்க வேண்டும். மேற்கூரை இரும்புத் தகட்டால் (Iron Shield) பொருத்த வேண்டும். கூரையின் விளிம்பு பக்கவாட்டில் இருபுறமும் முக்கால் அடி நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கூண்டை வராந்தாவில் வைத்து நாட்டுக்கோழி வளர்க்கலாம். கொட்டகை தேவையில்லை. கோழிகளுக்குத் தீவனம் (Fodder) மற்றும் தண்ணீரை அதற்கு உண்டான தட்டுகளில் கூண்டின் உள்ளேயே தரலாம்.
இலாபம்
ஒவ்வொரு அறையிலும் 10 நாட்டுக் கோழிகளை, ஒன்றரை கிலோ உடல் எடை அடையும் வரை வளர்க்கலாம். கூண்டின் 4 அறையிலும் சேர்த்து மொத்தமாக 40 கோழிகளை வளர்க்கலாம். கூண்டின் கீழே அல்லது மேலே இன்னொரு அடுக்கு அமைத்து 8 அறைகளாக்கினால் குஞ்சு பொரித்தது முதல் 5 மாத வயது வரையான 80 நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம். ஒரே கூண்டில் 2 முதல் 3 அடுக்குகள் வரை வைத்து நாட்டுக் கோழிகளை வளர்த்து லாபம் ஈட்டலாம்.
தடுப்பூசி
கூண்டு முறை வளர்ப்பில் காகம், பருந்து, வல்லுாறுகளால் கோழிக்குஞ்சுகள் துாக்கி செல்வதை தவிர்க்கலாம். 100க்கு 95 குஞ்சுகளுக்கு மேலாக வளர்த்து விற்பனை செய்ய முடியும். இறப்பு 4 சதவீதத்திற்கும் குறைவு தான். சுகாதாரமான முறையில் தீவனம் மற்றும் தண்ணீர் அளிக்க முடியும். தடுப்பூசி (Vaccine) போடுவது எளிது. கோழிகள் நோயின்றி வளரும். வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு குஞ்சு பொறித்த 7வது நாள் மற்றும் 8வது வாரத்தில் தடுப்பூசி போட்டால் நோய் தாக்காமல் ஆரோக்கியமாக வளரும். தேவைப்படும் போது கோழிகளின் அலகுகளை வெட்டுவதும் வெளிப்புற ஒட்டுண்ணிகளை நீக்குவதும் எளிது.
இவை குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக உடல் எடையுடன் வளரும். போதுமான அடர்தீவனம் அளித்தால் மூன்று மாதங்களில் சராசரியாக ஒரு கிலோ உடல் எடை கிடைக்கும். ஒரு கிலோ உடல் எடை வளர 3 முதல் 3½ கிலோ தீவனம் உட்கொள்ளும். பக்கத்து குடியிருப்பில் உள்ளவர்களுக்கு தொல்லையின்றி பெண்கள் வீட்டிலிருந்தபடியே கோழிகளை பராமரிக்கலாம்.
- பேராசிரியர் உமாராணி
கால்நடை சிகிச்சை வளாகம்
கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தேனி
kamleshharini@yahoo.com
மேலும் படிக்க
வயல்களில் பதுங்கியுள்ள எலிகள்- தந்திரமாகக் கையாள்வது எப்படி!
Share your comments