பாக்கெட் பால், பதப்படுத்தப்பட்ட பால், பல நாட்களுக்குக் கெடாத பால் என பல வகைகள் விற்பனை செய்யப்பட்டபோதிலும், மாட்டுப்பால் மீது எப்போது மக்களுக்கு எப்போதுமே தனி நம்பிக்கை உண்டு.
ஏனெனில், காலம் எவ்வளவுதான் மாறினாலும், ஆரோக்கியத்திற்கு உகந்தது மாட்டுப் பால்தான். அதனால்தான் மாடுகளுக்கும் மக்களுக்கும் உடனான பந்தம், காலங்களைக் கடந்தும் தொடர்கிறது.
அதிலும் பசும்பால் எளிதில் செரிமாணம் ஆகும் என்பதால், குழந்தைகளுக்கு வழங்குவதை நாம் காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம்.
அதேநேரத்தில் எருமைப்பால் அதிகக் கொழுப்புச்சத்து கொண்டது என்பதால், டீக்கடைகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் இன்றளவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.ஆக, பால் பண்ணை அமைக்க சிறந்த இனமாக முர்ரா எருமை (Murrah Buffallo) திகழ்கிறது.
பூர்வீகம்
மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த இன எருமை மாட்டினம் ஹரியானா மாநிலத்தின் ரோட்டக், ஹிசார், ஜின்த் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் நபா, பாட்டியாலா மாவட்டங்களிலிருந்தும், டெல்லியின் தெற்கு பகுதியிலிருந்தும் தோன்றியவை.
அதனால் டதில்லி, குந்தி, காலி என்றும் அறியப்படுகின்றன.
தோற்றம்
இவற்றின் உடல் அடர்ந்த கருப்பு (Dark Black) நிறமாகக் காணப்படும். வாலிலும், முகத்திலும், சில சமயங்களில் கால்களிலும் வெள்ளை நிறம் காணப்படும்.
அதிகக் கொழுப்புச்சத்து
இவ்வின எருமைகள் அதிக பால் உற்பத்திக்கும், பாலில் உள்ள அதிக கொழுப்புச்சத்திற்கும் இந்தியாவில் பெயர் பெற்றவை.
முர்ரா இன எருமைகளின் பாலில் 6.5 முதல் 9 சதவீதம் வரை கொழுப்புச்சத்து நிறைந்துள்ளது. இவற்றின் சராசரி பால் உற்பத்தி அளவு 1500-2500 கிலோவாகும். மேலும் இவற்றின் ஒரு நாள் சராசரி பால் உற்பத்தி 6.8 கிலோ.
கலப்பினம்
முர்ரா எருமைகளின் உடல் அதிக வெப்பம் கொண்டது என்பதால், கலப்பு மற்றும் செயற்கை இனப்பெருக்கத்திற்கு ஏற்றது. குறிப்பாகக் குறைந்த பால் உற்பத்தி கொண்ட நாட்டு எருமையினங்களை கலப்பினம் செய்வதற்கும் இவ்வின எருமைகள் பயன்படுகின்றன.
நோய்களை துவம்சம் செய்யும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட இவ்வகை எருமைகள், தென்னிந்தியாவின் சீதோஷணநிலையையும் தாங்கிக்கொள்ளும் வல்லமை கொண்டது. எனவே பால்பண்ணை தொடங்க விரும்புபவர்கள், முர்ரா இனத்தை வளர்ப்பது அதிக பலனைக் கொடுக்கும்.
பால்
நாள் ஒன்றுக்கு 10 முதல் 16 லிட்டர் பால் கறக்கக்கூடியவை. இவற்றின் பாலில் A2 புரோட்டீன் (Protein) நிறைந்தது. இந்த பாலில் தாய்ப்பாலில் இருப்பதைவிட அதிக புரதச்சத்து இடம்பெற்றுள்ளது. முர்ரா இனத்தில், 16 லிட்டருக்கும் அதிகமான பால் கறக்கும் எருமைகளும் உள்ளன. அவற்றின் விலை அதிகமாக இருக்கும்.
உடலமைப்பு
நன்கு பெருத்த, அகலமான தனக்கு நிகரற்ற உடலமைப்பு. மற்ற மாடுகளோடு ஒப்பிடும்போது தலை சிறியதாகவும், அதேநேரத்தில் சற்று நீளமானதாகவும் இருக்கும். மற்ற இனங்களில் இருந்து இந்த இனம் கொம்பில் வேறுபடுகிறது. முர்ரா இன எருமைகளின் கொம்பு சிறியதாகவும், அநேரநேரத்தில் பின்புறம் மேல்நோக்கி வளைந்த நிலையில் காணப்படும்.
ஆண் எருமைகள் சராசரியாக தலா 550 கிலோ வரையும், பெண் எருமைகள் தலா 450 கிலோ வரையும் எடை கொண்டவையாக இருக்கும். ஆண் எருமை 1.42 மீட்டர் வரையும், பெண் எருமை 1.32 மீட்டர் வரையும் வளரும் தன்மை படைத்தவை.
பால் கறக்கும் பக்குவம்
நன்கு போஷாக்கு அளித்து வளர்க்கப்பட்டால், 36 முதல் 48 மாதங்களிலேயே பால்கறக்கத் தொடங்கிவிடும்.இதன் காரணமாகவே இந்த இனத்தின் விலை அதிகம்.
இந்திய சீதோஷண நிலைக்கு பெரிதும் ஏற்றது முர்ரா எருமை இனம்.
வயது
இவற்றின் ஆயுட்காலம் சராசரியாக 11 -12 ஆண்டுகள். கற்பகாலம் 310 நாட்கள்.
செலவு
பச்சை இலைகள் 20 முதல் 25 கிலோ, வைக்கப்புல் - 8 முதல் 10 கிலோ என முர்ரா எருமை இனத்திற்கு உணவிற்காக நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.
விலை
முர்ரா இன எருமை மாடுகள், அவற்றின் தரத்திற்கு ஏற்ப 60 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.விலை அதிகம் கொடுக்கக் கொடுக்க உருவத்தில் பெரியதாகவும், அதிக பால் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும்.
மேலும் படிக்க...
இறந்த கால்நடைகளை கவனமாகக் கையாளவேண்டும் - கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தல்
பால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்ப்பு முறைகள் - கால்நடைத்துறையினர் யோசனை!
கொரோனா காலத்திற்கு ஏற்ற மஞ்சள் மசாலா பால்- எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது!
Share your comments