திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே மராம ரெட்டி பாளையம் ஊராட்சியில் உள்ளது காப்புக்காடு. சுமார் 250 ஹக்டேர் பரப்பளவில் உள்ள இந்த வனப்பகுதியில் யானைகளுக்கான மறுவாழ்வு மற்றும் மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த மறுவாழ்வு மையம்.
காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் தனி நபரிடம் இருந்த 7 யானைகளை மீட் டு இந்த வன காப்பக மையத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர். பராமரிப்பு பணிகள், திருச்சி மாவட்ட வன அலுவலரின் மேற்பார்வையில் வன சரகர்கள் மற்றும் யானைப் பாகன்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
3 வருடங்களுக்கு முன்பே இந்த மையம் தொடங்கப்பட்ட போதிலும், தனி நபர்களால் கைவிடப்பட்ட மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட யானைகளை இங்கு அழைத்துவந்து பராமரிக்க வேண்டும் என தமிழக வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு பிறகே இந்த யானைகள் மறுவாழ்வு மையம் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது.
2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த மையம், யானைகள் தங்களுடைய மன அழுத்தங்களைப் போக்கிக்கொள்ளத் தேவையான அனைத்து வசதிகளையும் தன்வசம் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கும், இந்திய விலங்குகள் ஆணையத்தின் அனுமதியுடன் தகுந்த மற்றும் தரமான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையம் துவங்கப்படுவதற்கு முன்பு, விலங்குகளைத் துன்புறுத்தி, தவறாகப் பயன்படுத்தியவர்களுக்கு வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும், அல்லது அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும்.
ஆனால் இந்த மையம் செயல்படத் துவங்கியது முதல், தனியாரிடம் இருந்து யானைகள் மீட்கப்பட்டு, இங்கு அழைத்துவரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மையத்தை பராமரிக்க ஆகும் செலவையும், பாகன்களின் ஊதியத்தையும் தமிழக அரசு வழங்குகிறது.
இங்கு தஞ்சமடையும் யானைகளுக்கு இயற்கையான சூழலில், சிறந்த சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள வனப்பகுதியில் இந்த யானைகள் மறுவாழ்வு மையம் அமைந்திருப்பது சிகிச்சை அளிப்பதற்கும் சாதகமான அம்சமாகும்.
மூங்கில் தடுப்பு அறை(Bamboo Kraal)
யானைகளுக்குத் தகுந்த காற்றோட்ட வசதிகளுடன் கூடிய மூங்கில் தடுப்புகளால் ஆன அருமையான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மறுவாழ்விற்கு உத்திரவாதம்
யானைகளைப் பார்வையிடுவதற்கும், உணவு வழங்குவதற்கும் மற்ற மையங்களில், அனுமதி அளிக்கப்படுவதைப்போல் இங்கு இல்லை.இந்த மையம் முழுக்க முழுக்க யானைகளின் மறுவாழ்விற்கு உத்திரவாதம் அளிக்கிறது.
ஒவ்வொரு யானையும் ஆனைமலை புலிகள் சரணாலயத்தால், நியமிக்கப்படும், யானைப்பாகன் மற்றும் அவரது உதவியாளரை வைத்து பராமரிக்கப்படுகிறது. வாரந்தோறும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இருந்து மருத்துவர் வரவழைக்கப்பட்டு யானைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
ஆனந்தக் குளியல் (Bathing)
காலை எழுந்ததும், அங்குள்ள குளத்தில் ஆனந்தக்குளியலில் ஈடுபட்டு மகிழ்கின்றன.
குளித்துப் பசியோடு வரும் யானைகளுக்கு பழங்கள், காய்கறிகள், அரிசி, பார்லி, கரும்பு மற்றும் தேங்காய் உள்ளிட்டவை உணவாக வழங்கப்படுகின்றன.
நடைபயிற்சி (Walking)
உணவை முடித்துக்கொண்டு, விலங்குகள் 2600 ஹெக்டேர் பரப்பிலான பாதுகாக்கப்பட்ட வனச்சகரகத்தை ஒரு சுற்று, சுற்றி வரவேண்டும்.
ஃபுட் மசாஜ் (Foot Massage)
இந்த நடைபயிற்சிக்கு பிறகு யானைகளும், அவற்றின் பாகன்களும் தங்களுக்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அறைகளில் ஓய்வு எடுக்கலாம். அனுதினமும் யானைகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின்படி ஃபுட் மசாஜ் (Foot Massage)அளிக்கப்படும்.
யானைகள் ஷவரில் (Shower)குளிக்கும் வசதியும் இங்கு உண்டு. ஒவ்வொரு யானைக்கும் அனுதினமும் 250 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன.
இதற்காக வனத்துறை சார்பில், இங்குள்ள வனப்பகுதியில், காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் 7 யானைகளைப் பராமரிக்கக்கூடிய வசதிகள் கொண்ட இந்த மையத்தை ஒட்டி, யானைகள் நடந்துசெல்ல தனிப்பாதை, கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சிசிடிவி வசதி, யானைகளின் பாதுகாப்புக்கான சிறப்பு மின்விளக்கு வசதி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. ஆக மொத்தம் இங்கு ஒரு யானையை பராமரிக்க நாள் ஒன்றுக்கு சுமார் 22 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது.
யானையைக் கட்டித் தீனி போடுவது என்றால் இதுதானோ?
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு
Share your comments