கால்நடை வளர்ப்பில் பருவநிலைக்கு ஏற்ப பராமரிப்பு என்பது மிக முக்கியமானதாகும். பொதுவாக கோடை காலங்களை விட மழைக்காலங்களில் எளிதில் நோய் தொற்று ஏற்படுவதால், அதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தடுக்கலாம். மழைக்காலத்தில் கொடுக்க வேண்டிய உணவு, அளிக்கும் முறை, சேமிப்பு திறன், பராமரிப்பு போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியம்.
கால்நடைகள் 2 முறைகளில் வளர்க்கப் படுகின்றன. ஒன்று கால்நடைகளை மேய்ச்சலுக்கு மட்டும் அனுப்பி வளர்ப்பது. மற்றொன்று பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு அளித்து வளர்ப்பதாகும். தமிழகத்தை பொறுத்தவரை மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்ப்பதையே பெரும்பாலானோர் பின்பற்றுகின்றனர். பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து அதனை அளிப்பது மற்றொரு வகையாகும்.
மழைக்காலங்களில், பசுந்தீவனம் மிகுதியாக கிடைப்பதால் கால்நடைகள் அதிகமாக புல்லை உட்க்கொள்ளும். இளம் புல்லின் மூலம் 'எம்டிரோ டாக்சிமியா' எனும் 'துள்ளுமாரி' நோய் ஏற்படும். அதில் உள்ள சில டாக்சின்களால், நோய்வாய் பட வாய்ப்புள்ளது. எனவே மழைக்காலத்தில் கால்நடைகளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் மேய்க்க அனுமதிக்க வேண்டும். வெயிலுக்கு பின் மழையில் முளைக்கும் புற்களை உண்பதால் வயிறு உப்புசம், கழிச்சல், செரிமான போன்றவற்றால் அவதிப்படும்.
தீவன மேலாண்மை
பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து கொடுக்கும் போது அவற்றை நன்கு உலர்த்தி, பின் கொடுக்க வேண்டும். மழைக்காலங்களில் கால்நடைகளின் செயல்பாடு சற்று மந்தமாக இருக்கும். இதனால் பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்திக்கு ஏற்ப அடர் தீவனத்தை அளிக்க வேண்டும். அவற்றை 2 வேளைகளாக பிரித்து பகல் நேரங்களில் மட்டுமே அளிப்பது சால சிறந்தது.
தீவன உற்பத்தி
கால்நடை பல்கலை கழக பேராசிரியர்கள் தீவன உற்பத்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார்கள். அதன்படி, மழைக்காலங்களில் தீவனப்புல் அதிகமாக விளையும் என்பதால் அவற்றை துண்டித்து 'ஊறுகாய் புல்' வடிவில் சேமித்து வைக்கலாம். கோ-4, கோ-எப்.எஸ்.29 போன்ற தீவனப்புல், இதுபோன்ற ஊறுகாய் புல் தயாரிப்புக்கு ஏற்றவை. மண் இல்லாமல் சேகரித்த புல்லை, சிறிய துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில், அடுக்கு போல தூவ வேண்டும். அதன் மீது கல் உப்பு மற்றும் நாட்டு சர்க்கரையை தூவ வேண்டும். இவற்றை காற்று, நீர் புகாமல் இருக்கமாக கட்டி பிளாஸ்டிக் பைகள் அல்லது நீல நிற பிளாஸ்டிக் டிரம்களில் சேகரித் வைக்கலாம். 45 நாட்களுக்குப்பின், அவற்றை பிரித்தால், பச்சை அல்லது இளம் தங்க நிறத்தில், பழ வாசனையுடன் காணப்படும். அவ்வாறு தென்பட்டால், நல்ல தரமான தீவனப்புல் உற்பத்தியாகி உள்ளதை உறுதி செய்யலாம். அவற்றை, பிரித்துவிட்டால், இரண்டு மாத காலத்துக்குள் மாடு, ஆடுகளுக்கு தீவனமாக வழங்கலாம். பசும்புல்லுக்கு உள்ள அதே அளவு சத்து, இதற்கும் உண்டு. ஒருவேளை, இந்த பாக்கெட்டை பிரிக்கும்போது, துர்நாற்றம், பூஞ்சான் பிடித்தாற்போல காணப்பட்டால் உடனே அப்புறப் படுத்த வேண்டும்.
கால்நடை பராமரிப்பு
- கொட்டகைகளில் மழை நீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கால்நடைகளின் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
- கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் சுகாதாரமான தீவனம், சுத்தமான குடிநீர் அளிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே தீவன தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மீதமாகும் தீவனத்தை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
- மழைக்காலங்களில் கொசுக்கள், உண்ணிகள் போன்றவை உற்பத்தி ஆகும். எனவே தீவனத்தொட்டியை சுற்றியும், கொட்டகையை சுற்றியும், பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தல் மிகவும் அவசியம்.
- கோமாரி நோய் அறிகுறி தென்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
- தண்ணீர் தொட்டியை வாரம் ஒரு முறை சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்தல் வேண்டும். இதன் மூலம் பாசி பிடித்தலை தவிர்க்க இயலும். மேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றி கால்நடைகளை பாதுகாக்க முடியும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments