தமிழ்நாட்டில் இப்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது கட்டுக்கடங்காத தெரு நாய்களின் எண்ணிக்கை எனலாம். இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் எழுந்து வரக்கூடிய சூழலும் உருவாகியுள்ளது.
இதனிடையே, வெறிநாய்களின் தாக்குதலால் உண்டாகும் ரேபிஸ் நோயினால் இறப்பு விகிதம் தொடர்ச்சியாக இந்தியாவில் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. ரேபிஸ் தொற்றுள்ள நாய்களின் அறிகுறிகள் என்ன? நாய் ஒருவரை கடித்தால் அவர் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? போன்றவை குறித்து சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தின் கால்நடை அறிவியல் துறை விஞ்ஞானியான முனைவர் ராமகிருஷ்ணன் பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
வீட்டு நாயாக இருந்தாலும் அலட்சியம் வேண்டாம்:
முனைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ”நாய் கடித்து விட்டால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவை நாம் வீட்டில் வளர்க்கும் நாயாக இருந்தாலும் சரி, ஏற்கெனவே தடுப்பூசி போட்டு இருக்கிறோம் என்றாலும் சரி. முதலில் பண்ண வேண்டியது, குழாயினை திறந்து ஓடும் நீரில் சோப்பு/கிருமி நாசியினை கொண்டு நாய் கடித்த இடத்தினை கழுவ வேண்டும். அதன்பின் தடுப்பூசி போடுவதற்கு உரிய மருத்துவரை அணுக வேண்டும்.”
”முக்கியமாக, நாய் கடித்த இடத்தில் மஞ்சள், மண் போன்றவற்றை போடாமல் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி இருப்பு உள்ளது. மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப, குறிப்பிட்ட தேதியில் மறவாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.” என்றார்.
வெறிநாயினை கண்டறிந்தால் என்ன செய்வது?
தொற்றினால் பாதிக்கப்பட்ட நாயினை என்ன செய்வது, என்று நாம் எழுப்பிய கேள்விக்கு முனைவர் ராமகிருஷ்ணன் அளித்த பதில்கள் பின்வருமாறு-
”இன்னும் பல இடங்களில் வெறிநாய் கடித்துவிட்டால், அந்த நாயினை கொன்றுவிடுகிறார்கள். அவ்வாறு செய்வது தவறு, குறைந்தது ஒரு 15 நாட்கள் அந்த நாயின் நடத்தை மற்றும் குணாதிசயங்கள் எவ்வாறு உள்ளது என்பதை தொடர்ந்து கண்காணித்து அதன்பின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், வீட்டில் செல்ல பிராணியாக நாயினை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக, அதற்கு ரேபிஸ் தடுப்பூசியினை போட வேண்டும். மூன்று மாதங்களில் முதல் தடுப்பூசியினை போட்டுக் கொண்ட பின் பூஸ்டரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் கடைசியாக தடுப்பூசி செலுத்திய நாளிலிருந்து ஒரு வருடம் கணக்கிட்டு வருடத்திற்கு ஒருமுறை ரேபிஸ் தடுப்பூசியினை செலுத்தி வர வேண்டும்” என்றார்.
நோய் தொற்று அறிகுறி என்ன?
ரேபிஸ் தொற்று தாக்குதலுக்கு உள்ளாகிய நாயினை கண்டறிவது எப்படி என்ற கேள்விக்கு,” ஒரு நாய் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதா என்பதை அதன் நடவடிக்கைகள் மூலம் கண்டறியலாம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், தண்ணீரை பார்த்து- வெளிச்சத்தை பார்த்து பயந்து ஓடும். ரொம்ப துறுதுறுவென இருக்கும், மரங்கள், கட்டைகள் போன்றவற்றை கடிக்கும்."
Read also: செம்மறி ஆடுகளை இலவசமாக தரும் நெருக்கடியில் விவசாயிகள்- காரணம் என்ன?
"அறிகுறிகளில் முக்கியமானது, ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளாகிய நாயின் தொண்டைக்குழியில் உள்ள தசைகள் வலுவிழந்து காணப்படும், இதனால் உணவு உட்பட எதையும் விழுங்கா முடியாமல் தவிக்கும். நாமும், ஏதோ வாயில் சிக்கியுள்ளது என நமது கையினை உள்ளே விடும் பட்சத்தில் தொற்று நமக்கும் பரவ வாய்ப்புண்டு. நாயின் வாயில் கைவிடும் பட்சத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என முனைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ரேபிஸ் நோய் தாக்குதலினால் உலகளவில் இந்தியாவில் தான் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. வருடத்திற்கு தோராயமாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் சூழ்நிலையில், நாய் கடித்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைகளை பெறுங்கள்.
Read more:
மாட்டு சாணத்திலிருந்து எரிவாயு- வாகனங்களில் நிரப்ப பங்க்: விலை எவ்வளவு?
CARI-NIRBHEEK: விவசாயிகளுக்கு ஏற்ற கோழி இனம்! அப்படி என்ன சிறப்பு?
Share your comments