வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளைச் சந்திக்கும் நீதிமன்றங்கள், சில வேளைகளில் சிக்கலான மற்றும் வேடிக்கையான வழக்குகளுக்கும் தீர்ப்பு அளிக்க வேண்டியக் கட்டாயத்தை எதிர்கொள்கின்றன.
அப்படியொரு விசித்திரமான வழக்குதான் இது. ராஜஸ்தானில் சிறைக் கைதியாக உள்ளவருக்கு, அவரது மனைவியை கர்ப்பம் தரிக்க வைப்பதற்காக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற கிளை, 15 நாள் பரோல் வழங்கியுள்ளது.
ராஜஸ்தானில் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நந்த் லால் என்பவருக்கு பில்வாரா நீதிமன்றம் 2019ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் அஜ்மீர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது மனைவி ரேகா ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் தாக்கல் செய்த மனுவில், குழந்தை பெற்றுக்கொள்ள உரிமை உள்ளதாகவும், இதனடிப்படையில் தனது கணவரை விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த மனு விசாரணையின்போது, நந்த் லாலின் மனைவி நிரபராதி என்றும், அந்த ஆணின் சிறை தண்டனையால் திருமண வாழ்க்கையுடன் தொடர்புடைய அவரது பாலியல் மற்றும் உணர்ச்சித் தேவைகள் பாதிக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் கருதினர். இதன் அடிப்படையில் அவர்கள் விநோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
தீர்ப்பு (Judgement)
உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-
எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், ஒவ்வொரு வழக்கின் தனித்தன்மையான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு உட்பட்டு, ஒரு கைதிக்கு சந்ததியைப் பெறுவதற்கான உரிமை உள்ளது. தண்டனைக் கைதியின் மனைவி, சந்ததியைப் பெறுவதற்கான உரிமையை ஒருபோதும் பறிக்க இயலாது.
சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர, எந்தவொரு நபரின் உயிரையும் தனிப்பட்ட சுதந்திரமும் பறிக்கப்படக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. அதன் வரம்பிற்குள் கைதிகளும் அடங்குவர். எனவே, மனைவி கர்ப்பம் தரிக்க நந்த் லாலுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க...
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு!
Share your comments