திருப்பதியில் தனது ஆட்டோவில் புற்கள், சிறு செடிகளை வளர்த்து பசுமை ஆட்டோவாக மாற்றியுள்ள ஆட்டோ டிரைவர் பாபு தான் இணையத்தில் தற்போது டிரெண்டிங்க். சாதாரண ஆட்டோவினை பசுமை ஆட்டோவாக மாற்றியதற்கு பின்னால் உள்ள கதை தான் என்ன?
உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. வெளியே எங்கையாவது சென்றால் எப்போது மீண்டும் வீட்டுக்குள்ள நுழைவோம்னு மனமும், உடலும் ஏங்கி போயிருக்கிற சூழ்நிலை தான் இப்போது நம்மளை சுற்றியுள்ளது. இந்தியா முழுவதும் இன்னும் அக்னி நட்சத்திரமே தொடங்காத நிலையில், பல்வேறு இடங்களில் சதமடிக்க தொடங்கி விட்டது வெப்பநிலை. மருத்துவர்களும், அரசுகளும் வெப்பநிலை தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வரும் நிலையில் தனது ஆட்டோவினை பசுமை ஆட்டோவாக மாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளார் திருப்பதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு.
வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கடினமான சூழ்நிலையில் தான் வயிற்று பிழைப்புக்காக ஆட்டோ தொழிலில் ஈடுபட தொடங்கினார் பாபு. இயற்கையின் மீது தீரா காதல் கொண்ட பாபு தனது ஆட்டோவில் சிறு செடிகளை வளர்க்கத் தொடங்கினார். இது அந்தப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், ஆட்டோவின் முன் பகுதியை மட்டும் தவிர்த்து ஆட்டோவின் பின்பகுதி, பக்கவாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறிய செடி, புற்களை வளர்க்க துவங்கியுள்ளார். தற்போது அதனை பராமரித்தும் வருகிறார்.
திருப்பதியில் சுற்றுக்கொண்டிருக்கும் ஆட்டோகளுக்கு மத்தியில் ஒரு சிறிய பசுமை காடு நகர்ந்து வருவது போல் தனித்து தெரிகிறது பாபுவின் ஆட்டோ. கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்தச் சூழலில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களும் வெப்பநிலை தாக்கத்தால் வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலையில் மற்ற ஆட்டோக்கள் மரத்தடி நிழலிலும், ஆட்டோ நிறுத்தங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த சமயத்திலும் பாபுவின் ஆட்டோ பம்பரம் போல் திருப்பதி நகரினை வலம் வருகிறது.
பொதுமக்களும் தங்களது பயண திட்டத்தை தாண்டி, ஒரு முறையாவது பாபுவின் பசுமை ஆட்டோவில் பயணித்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தில் உள்ளதால், பாபுவின் காட்டில் எப்போதும் அடைமழை தான். மேலும் தனது ஆட்டோவில் பயணிக்கும் நபர்களிடம் இயற்கை சூழல் குறித்தும், மரம் வளர்ப்பின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு வழங்கி வருகின்றார்.
இவரை பற்றிய விவரங்கள், சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் நெட்டிசன்களும் பாபுவின் பசுமை ஆட்டோ யோசனையினை பாராட்டியும், அவரது வீடியோவினை ஷேர் செய்தும் வருகின்றனர். சும்மாவா சொன்னாங்க எண்ணம் போல் வாழ்க்கைனு !
மேலும் காண்க:
திருமண மண்டபங்களில் மதுபானம்- கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகள் என்ன?
Share your comments