UIDAI-இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையானது, ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான செயல்முறைகளுக்காகவும் பயன்படுகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது UIDAI.
இந்நிலையில் ஆதார் கார்டில் உள்ள தகவல்களை கட்டணமின்றி ஆன்லைனில் புதுப்பிக்க ஒன்றிய அரசு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி டிசம்பர் 14 வரை (இன்று) ஆதார் தொடர்பான தகவல்களில் மாற்றங்கள்/திருத்தங்கள் செய்ய வழக்கமாக வசூலிக்கப்படும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது UIDAI.
இதுத்தொடர்பாக UIDAI வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுமக்களின் ஆதரவு அதிகமாக இருப்பதால், இலவசமாக ஆதார் அப்டேட் செய்யும் வசதியை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது (15.12.2023 முதல் 14.03.2024) வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 14.03.2024 வரை https://myaadhaar.uidai.gov.in/ இல் உள்ள myAadhaar போர்ட்டல் மூலம் ஆவணப் புதுப்பிப்புக்கான வசதி இலவசமாகத் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின் படி மார்ச் 14-க்கு (2024) பின் பழைய முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு (பெயர், பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி எண்) தொடர்பான ஆதார் விவரங்களை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும் என்பது விதி. அவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள அடையாள சான்று (POI-Proof of Identity) மற்றும் முகவரி சான்று POA- (Proof OF Address) ஆகியவற்றை புதுப்பித்துக்கொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தினை அணுகலாம் அல்லது மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாக மையத்திற்கு சென்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.
1) வாக்காளர் அடையாள அட்டை 2) குடும்ப அட்டை, 3) ஓட்டுநர் உரிமம், 4) பான் கார்டு, 5) வங்கி கணக்கு புத்தகம்.
ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியைப் புதுப்பிக்க கீழ்க்காணும் இந்த 8 படிகளைப் (steps) பின்பற்றவும்:
படி 1: uidai.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும். அதில் விருப்பமான மொழியினை தேர்வு செய்யவும்.
படி 2:அதன்பின் 'எனது ஆதார்' பக்கத்தின் கீழ், 'புள்ளிவிவரங்கள் தரவைப் புதுப்பித்து நிலையைச் சரிபார்க்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3:நீங்கள் வேறு இணையதளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள் https://myaadhaar.uidai.gov.in/ நீங்கள் 'உள்நுழை' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
Read more: ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்புடன் விவசாயம்- லட்சங்களில் வருமானம் ஈட்டும் இளைஞர்
படி 4:உங்கள் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். 'ஓடிபி அனுப்பு' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.
படி 5:OTP உள்ளீட்டு உள்நுழைந்ததும், 'ஆன்லைனில் ஆதார் புதுப்பி' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 6:வழிகாட்டு நெறிமுறைகளைப் படித்து, 'ஆதாரைப் புதுப்பிக்க தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 7: நீங்கள் புதுப்பிக்க விரும்பும் தரவினை ( பெயர், பிறந்த தேதி, விலாசம்/முகவரி) தேர்ந்தெடுக்கவும். உதாரணத்திற்கு ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்பட வேண்டிய புதிய முகவரிக்கான ஆதாரத்தை நீங்கள் பதிவேற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். 'ஆதாரைப் புதுப்பிக்க தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 8: விவரங்கள் சரியாக இருந்தால் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பானது இன்னும் ஒரிரு வாரத்தில் நிறைவடைய உள்ளதால், இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Read more:
அடேங்கப்பா.. ஒரே நாளில் 1000 ரூபாய் வரை விலை அதிகரித்த தங்கம்!
புயல் நிவாரணம் ரூ.6000- புதிய அப்டேட் வழங்கியது தமிழ்நாடு அரசு
Share your comments