லாரிகளில் ஓட்டுநர்கள் அமரும் கேபினை AC வசதியுடன் அமைப்பது கட்டாயம் என ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடும் கோப்புகளில் ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய நிதின் கட்காரி, ”தான் அமைச்சராகப் பொறுப்பேற்ற நாள் முதல் டிரக் கேபின்களில் ஏர் கண்டிஷனர்களை அறிமுகப்படுத்த விரும்பினேன். இருப்பினும், லாரிகளின் அதிக விலை குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழுந்ததால் இந்த திட்டத்தை கொண்டு வர இயலவில்லை”
“ஆனால் இன்று இந்த நிகழ்வுக்கு வருவதற்கு முன்பு, லாரி டிரைவர் பெட்டிகளில் ஏர் கண்டிஷனிங் கட்டாயமாக்கும் கோப்பில் கையெழுத்திட்டேன். தற்போது மாறியுள்ள காலச்சூழ்நிலையில் 43-47 டிகிரி செல்சியஸ் வரையிலான வெயிலில் லாரி ஓட்டுநர்கள் பணி செய்கிறார்கள். அதை மனதில் வைத்து தற்போது நடைமுறைப்படுத்த முடிவு எடுத்துள்ளோம். லாரி ஓட்டுநர்களின் பாதுகாப்பினை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்,” என்று கட்கரி கூறினார். 2025 முதல் அனைத்து லாரிகளிலும் குளிரூட்டப்பட்ட ஓட்டுநர் பெட்டிகள் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் வழியோர வசதி மையங்களை மேம்படுத்த ஒன்றிய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். 570 சாலையோர வசதி மையங்களை தனது அமைச்சகம் செய்து வருவதாகவும், இதற்காக 170-க்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு 50 கிலோமீட்டர் நீள நெடுஞ்சாலைகளிலும் ஒரு வசதி மையம் உருவாக்குவதே தங்களது இலக்கு என்றும் அவர் கூறினார்.
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சர், அவற்றைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
சாலைகளை சிறப்பாக வடிவமைத்து, சரியான விதிகளை பின்பற்ற ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் லேன் டிரைவிங் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கட்கரி கூறினார்.
ராகுல் காந்தியால் வந்த மாற்றமா?
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்று வாஷிங்டனில் இருந்து நியூயார்க்கிற்கு டிரக்கில் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவின. அந்த வீடியோ வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு கட்காரியிடமிருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ராகுல் காந்தி தனது பயணத்தின் போது, டிரக் டிரைவர்களுடன் உரையாடினார். அமெரிக்காவிலும், இந்தியாவிலும் உள்ள டிரக் டிரைவர்களுக்கான வித்தியாசம் மற்றும் சிக்கல்களை குறித்தும் விரிவாக பேசினார்.
இந்தியாவில் டிரக்குகள் டிரைவரின் வசதிக்காக வடிவமைக்கப்படவில்லை என்றும், அமெரிக்காவில் பாதுகாப்பு மற்றும் வசதி அம்சங்கள் உற்பத்தியாளர்களுக்கான முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஏற்கெனவே வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வினால் வாகனங்களின் விலை பன்மடங்கு உயர்ந்து உள்ள நிலையில், AC வசதி கட்டாயமாக்கப்படும் பட்சத்தில் லாரிகளின் விலை உயர்வு அதிகரிக்கும் என்றே ஓட்டுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் காண்க:
மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போ? அமைச்சர் தந்த அதிர்ச்சி பதில்
Share your comments