விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு வேளாண் மீதான தடை உத்தரவை நீக்கியதை அடுத்து, அதற்கு தேவையான இடுபொருள், உரம் விற்பனை மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் பணிகள் தடையின்றி நடைபெற தினமும் காலை, 8.00 மணி முதல் 11.00 மணி வரை செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
வேளாண் துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விற்பனை மையங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு யூரியாவை விற்பனை செய்தாலோ அல்லது அத்துடன் பிற உரங்களைச் சேர்த்து வாங்கும்படி வற்புறுத்தினாலோ, அவர்களின் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985ன்படி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது டெல்டா மாவட்டங்களில் நெல், உளுந்து, பருத்தி போன்ற கோடை பருவ சாகுபடி பயிர்களுக்கு உரமிடுவதற்காக போதிய யூரியா உரம் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து சரக்கு ரயில் மூலம் 1,200 டன்கள் யூரியா உரம் தஞ்சைக்கு வந்து சேர்ந்தது. இதல், 450 டன்கள் யூரியா உரம் திருவாரூர் மாவட்டத்துக்கும், மீதமுள்ள 750 டன்கள் யூரியா உரம் தஞ்சாவூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார். மேலும் கூடுதலாக, 2,000 டன்கள் யூரியா வார இறுதியில் வரவுள்ளன என தெரிவித்தார். மேலும் விவசாயிகளும், விற்பனையாளர்களும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
- விற்பனையின் போது நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பி.ஓ.எஸ். இயந்திரங்களின் மீது கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். அனைவரும் முறையான சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- விற்பனையாளர்கள் அல்லது விற்பனை மையங்கள் பி.ஓ.எஸ். இயந்திரம் மூலம் ரசீது போடாமல் விற்பனை செய்ய கூடாது.
- கடைக்கு வரும் விவசாயிகள் பொருட்களை வாங்கிய உடன் கலைந்து செல்வதை விற்பனை மையங்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் , இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், விவசாயிகள்அப்பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மற்றும் தரக் கட்டுப்பாடு உதவி இயக்குநரிடம் தெரிவிக்கலாம்.
Share your comments