சார்ஜிங் செய்ய, மின் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சென்னையில் உள்ள முக்கிய பெட்ரோல் 'பங்க்'குகளில், சார்ஜிங் செய்து தயார் நிலையில் உள்ள, 'பேட்டரி'களை மாற்றும் மையங்களை விரைவில் துவக்க உள்ளன.
மத்திய அரசு, சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க, பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களை (Electric Scooter) பயன்படுத்துமாறு, வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி வருகிறது.
பெட்ரோல் பங்க்
இதனால், வாகன தயாரிப்பு நிறுவனங்களும், அந்த வாகனங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.அதற்கு ஏற்ப, அந்த வாகனங்களை சார்ஜிங் செய்வதற்கான கட்டமைப்பை அதிகளவில் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுஉள்ளது. இதற்காக, மத்திய மின் துறை, மாநகராட்சி பகுதிகளில், 3 கி.மீ., துாரத்திற்கு ஒரு சார்ஜிங் மையமும், தேசிய நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ., துாரத்திற்கு ஒரு சார்ஜிங் மையமும் அமைக்குமாறு, மாநில அரசுகளிடம் தெரிவித்துள்ளது. வீடு மற்றும் சார்ஜிங் மையங்களில் வாகனங்களை சார்ஜ் செய்ய, ஒரு மணி நேரத்திறகு மேல் ஆகும்.
இந்நிலையில் சார்ஜிங் செய்ய வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க, எண்ணெய் நிறுவனங்கள், சென்னையில் உள்ள முக்கிய பெட்ரோல் பங்க்குகளில் (Petrol Bunk), ஏற்கனவே சார்ஜ் செய்து தயார் நிலையில் உள்ள பேட்டரி மாற்றும் மையங்களை துவக்க உள்ளன.
இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீட்டில், எலக்ட்ரிக் காரை, அதன் திறனுக்கு ஏற்ப சார்ஜிங் (Charging) செய்ய ஏழு மணி நேரமாகலாம். சார்ஜிங் மையங்களில் இரண்டு மணி நேரமாகும். அதற்கு 15 யூனிட் முதல், 30 யூனிட் வரை மின்சாரம் தேவைப்படும்.
'ஸ்வேப்பிங்'
ஒரு முறை சார்ஜிங் செய்தால், 150 கி.மீ., முதல், 200 கி.மீ., வரை பயணிக்கலாம். 'பை'க்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கி.மீ., செல்லலாம். ஒரு மணி நேரம் வரை சார்ஜிங் ஆகும். உ.பி., போன்ற மாநிலங்களில், வாகனங்கள் சார்ஜிங் செய்ய காத்திருப்பதை தவிர்க்க, 'ஸ்வேப்பிங்' எனப்படும் பேட்டரி மாற்றும் மையங்கள், பெட்ரோல் பங்க்குகளில் துவக்கப்பட்டு உள்ளன.
அந்த மையங்களில், ஏற்கனவே சார்ஜிங் செய்யப்பட்ட பேட்டரிகள் தயார் நிலையில் இருக்கும். மையங்களுக்கு வாகனங்களை எடுத்து வந்ததும், சார்ஜிங் முடிந்த பேட்டரி (Battery) கழற்றப்பட்டு, சார்ஜிங் செய்யப்பட்ட பேட்டரி மாற்றப்படும்.இந்த பணி, மூன்று நிமிடங்களில் முடிந்து விடும்.
தற்போது, 'லித்தினியம் அயன் பேட்டரி' தான் அதிக பயன்பாட்டில் உள்ளன. லித்தினியம் விலை அதிகம். அந்த பேட்டரிக்கு மாற்றாக, இந்தியன் ஆயில் நிறுவனம், 'பினெர்ஜி' என்ற நிறுவனத்துடன் இணைந்து, 'அலுமினியம் ஏர் பேட்டரி' தயாரித்து வருகிறது. லித்தினியத்தை விட, அலுமினியம் விலை குறைவு என்பதால், பேட்டரியும் குறைந்த விலைக்கு கிடைக்கும்.
பரிசோதனை
பாரத் பெட்ரோலியம், 'இ டிரைவ்' என்ற பெயரில், சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப ஆலோசனையில் லித்தினியம் பேட்டரி தயாரித்து விற்கிறது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், தனியார் நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி விற்கிறது.
தற்போது சென்னையில், எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம், மெட்ரோ ரயில் (Metro Train) நிலையங்களில், சார்ஜிங் மையங்களை துவக்கி வருகிறது. சார்ஜ் செய்ய காத்திருப்பதை தவிர்க்க எண்ணெய் நிறுவனங்கள் பரிசோதனை முயற்சியாக, சென்னையில் 15 பெட்ரோல் பங்குக்களில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி மாற்றும் மையங்களை துவக்க முடிவு செய்துள்ளன. அவை, விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.பேட்டரி மாற்றும் கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பேட்டரிகளை சார்ஜிங் செய்து வழங்கும் நிறுவனங்கள், அதற்கான மின்சாரத்தை பெற, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளன.
மேலும் படிக்க
இந்தியாவின் முதல் பறக்கும் கார் திட்டம்: சென்னை நிறுவனம் சாதனை
ஒரே ஒரு போன் போடுங்க: இரயில் பயணத்தில் சீட்டுக்கே வரும் சாப்பாடு!
Share your comments