முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி வரையில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறு நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கத்தில் 2015 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை (Pradhan Mantri Mudra Yojana) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத, வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றன.
மூன்று பிரிவுகளில் கடனுதவி
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. ஷிஷு (Shishu) என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் (Kishor) என்ற பெயரில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் (Tarun) என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட இன்றோடு ஆறு ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், இதுவரையில் 28.86 கோடிப் பேருக்கு ரூ.14.96 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
2020-21ஆம் ஆண்டில் மொத்தம் மொத்தம் 4.20 கோடிப் பேருக்கு கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், சராசரியாக ஒருவருக்கு ரூ.52,000 என்ற அளவில் கடனுதவி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலுக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்காது. இந்தக் கடனுக்காக எந்தவொரு கார்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது. புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனளிக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
உங்களுக்கு அருகில் உள்ள வங்கிகளிலேயே இதற்கான விண்ணப்பங்கள் (Application form) கிடைக்கும். விண்ணப்பத்தில் அடையாளச் சான்று, இருப்பிட சான்று, புகைப்படம், இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது, சப்ளையர் விபரங்கள், தொழிற்சாலை இருக்கும் இடம் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
முத்ரா கடன் கிடைத்தவுடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை (Mudra Card) வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரெடிட் கார்டு போல நீங்கள் பயன்படுத்தலாம். இந்த அட்டை மூலமாக கடன் தொகையில் 10 சதவீதம், அதிகபட்சம் ரூ.10,000 வரை பயன்படுத்தலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கணவன் மனைவி கூட்டாக சேமிக்க அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்! இருவருக்குமே மாத வருமானம்!
கேஸ் சிலிண்டர் சலுகை! ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்!
Share your comments