தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. பருவநிலை மாற்றத்தினால் இந்நோய் கால்நடைகளை அதிக அளவில் தாக்கி இறுதியில் உயிரிழக்க செய்யும். சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி வெளியிட்ட செய்தி குறிப்பில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக குளிர் மற்றும் பனிக் காலங்களில் மாடுகளை தாக்கும் கோமாரி நோயினை, உரிய நேரத்தில் தடுப்பூசிகள் போடுவதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்கலாம். அதைக் கருத்தில் கொண்டு கோமாரி நோய்க்கு தடுப்பூசியினை அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து போட்டு வருகிறது. அதன்படி, தற்போது சென்னையில் தொடங்கி உள்ள தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் 3ம் தேதி வரை தொடர்நது நடைபெறும்.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 8,550 கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த முகாமில் பசு, எருது, எருமை, 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்று ஆகியவற்றுக்கு தடுப்பூசிகள் போடப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
முகாம்கள் நடைபெறும் நாள், இடம் மற்றும் தேதி போன்ற தகவல்களை, சம்பந்தப்பட்ட பகுதி கால்நடை பராமரிப்புப் பணியாளர்கள் முன்கூட்டியே அறிவிப்பார்கள். இந்த வாய்ப்பினை கால்நடை உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments