மானாவாரி விவசாயத்தினை மேம்படுத்தும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2000 எக்டேர் பரப்பில் பயிறு வகைப் பயிர்கள் பயிரிடும் படி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மாவட்ட வேளாண்மை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், மானாவாரி வளர்ச்சி இயக்கம் எனும் புதிய திட்டம் மூலம் நிலைக்கத்தக்க விவசாயத்தை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வேளாண்மைத் துறை மூலம் 2020-21ம் ஆண்டில் மானாவாரி விவசாயத்தினை ஊக்குவிக்கவும், சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்தும் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், திருப்பெரும்புதூர், சிறுகாவோரிப்பாக்கம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய 4 வட்டாரங்களிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பவிஞ்சூர், அச்சரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், சித்தாமூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய 5 வட்டாரங்களிலும் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மானாவாரி நிலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அவற்றை 100 எக்டேர் பரப்பளவு கொண்ட தொகுப்புகளாக பிரித்து அதிலுள்ள விவசாயிகளுக்கு கோடை உழவு மேற்கொள்வதற்கு எக்டேருக்கு ரூ.1.250 மானியமாக வழங்கப்பட உள்ளது. மேலும் அத்துடன் 50 சதவீத மானிய விலையில் பயிரிட தேவையான விதைகள், ஊடுபயிருக்கான விதைகள்,
விதை நேர்த்தி மருந்துகள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட உள்ளது. இதில் சிறப்பாக செயலாற்றும் விவசாய குழுக்களுக்கு மானியத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதற்கான இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் மானாவாரி விவசாயிகள் அருகில் உள்ள தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி தேவையான விவரங்களை பெறலாம்.
Share your comments