
குறைவில்லா வருவாய் தரும் கீரை சாகுபடியை மேற்கொள்ளவதற்கு திருப்பூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். உடுமலை அருகே, கிளுவங்காட்டூர், குறிச்சிக்கோட்டை சுற்றுப்பகுதிகளில் குறைந்த பரப்பளவில், கிணற்றுப்பாசனத்தின் மூலம் கீரை சாகுபடி அமோகமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இருந்து தினமும், உடுமலை உழவர் சந்தைக்கு பலவகையான கீரைக்கட்டுகள் கொண்டு வரப்பட்டு நாளொன்றுக்கு குறைந்தபட்சம், 100 கட்டுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், விதைக்கும் முன் பத்து சென்ட் அளவுக்கு பாத்தி போன்று பிரித்து, ஒவ்வொரு கட்டமாக விதைப்பு செய்கிறோம். விதைப்பின் போது ஒரு தண்ணீரும், அறுவடைக்கு முன் ஒரு தண்ணீர் என, இரண்டு முறை பாசனம் செய்தால் போதுமானது.பொதுவாக சிறுக்கீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரைகள் விதைத்த, 25 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். மணத்தக்காளி கீரைக்கு மட்டும் நாற்று உற்பத்தி செய்ய வேண்டி உள்ளதால், விளைநிலத்தில் நாற்றுகளை நடவு செய்து பின் அதிலிருந்து ஒரு மாதம் இடைவெளியில் அறுவடை செய்கிறோம். மீண்டும் 15 முதல், 20 நாட்கள் இடைவெளியில் கீரை தழைத்து அடுத்த அறுவடைக்கு தயாராகி விடும். ஒருமுறை நடவு செய்தால் தொடர்ந்து 20 முறை அறுவடை செய்யமுடியும் என்கிறார்கள். பாலக்கீரையும் தொடர்ந்து, 6 மாதங்கள் வரை பலன் தரும் என்கிறார்கள். மற்ற காய்கறி சாகுபடியுடன் ஒப்பிடுகையில் கீரை சாகுபடி லாபம் தருவதாக உள்ளது என்கிறார்கள்.
Share your comments