இன்று இந்தியா முழுவதும் 9-வது தேசிய கைத்தறித் தினம் கடைப்பிடிக்கப்படும் சூழ்நிலையில் கைத்தறி நெசவுத் தொழிலை மேம்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஏன் இதற்கென ஒரு தினம் என்பது குறித்த தகவலை இங்கு காண்போம்.
இந்தியா நாட்டிலேயே அதிக கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் மாநிலம் தமிழகம் தான். காஞ்சி பட்டுக்கு மயங்காத மனம் உண்டோ? இவ்வுலகில் என தைரியமாக கூறலாம். மூன்று இழைகளில் அதிக எடையுடன் பல்வேறு தொழில்நுட்ப உத்திகளை கொண்ட காஞ்சி அசல் பட்டுப்புடவைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுவது ஏன்?
1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாகவும், கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நெசவாளர்களின் பெருமையினை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதல் தேசிய கைத்தறி தினம் எப்போது?
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது தேசிய கைத்தறி தினத்தினை பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் நாடு முழுவதும் 9 வது தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கைத்தறி தொழிலும்- அரசின் நடவடிக்கைகளும்:
நெசவு தொழிலில் இளைஞர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நெசவு குறித்து பயிற்சி வழங்கி அவர்களை தொழில் முனைவராக்கும் வகையில் இளம் நெசவாளர்களுக்கான நெசவு தூண்டும் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் நடைமுறையில் உள்ளது.
கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவுத் தொழிலினை தொழில்நுட்ப வகையில் மாற்றம் செய்திட மின்னணு ஜக்கார்டு இயந்திரங்கள், மோட்டார் பொருத்திய ஜக்கார்டு லிப்டிங் இயந்திரங்கள், அச்சுக் கோர்க்கும் அட்டைகள் புதிய தறிகள் நிறுவுவதற்கு 90 சதவீத அரசு மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், நெசவு மற்றும் துணிநூல் வடிவமைப்பு போன்ற பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் நெசவுத் தொழில் சார்ந்து புதிய வடிவமைப்புகளை உருவாக்கும் இன்றைய தலைமுறையினரில் சிறந்த இளம் வடிவமைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசின் சார்பில் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் 60 நெசவாளர்களுக்கு ரூ.94.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., வழங்கினார். இதனைப்போன்று அனைத்து ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டங்களிலும் தேசிய கைத்தறி தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும் காண்க:
ஆடி பிறந்தும் கொளுத்தும் வெயில்- இந்த மாவட்டம் எல்லாம் உஷாரா இருங்க
Share your comments