இ.எம்.ஐ., எனப்படும், மாதாந்திர தவணை முறையில் பணத்தை திருப்பிச் செலுத்தலாம் என்ற வசதி, இன்று எதிர்பாராதவிதமாக பல துறைகளில் கோலோச்ச துவங்கியுள்ளது.
முதலில், வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையில் ஆரம்பித்த இ.எம்.ஐ., (EMI) பின்னர், வீட்டு கடனை திருப்பிச் செலுத்துவதற்கு பயன்பட்டது. தற்போது, பள்ளி கட்டணம் செலுத்தவும், விமான டிக்கெட்டுக்கான கட்டணத்திற்கும், இ.எம்.ஐ., வந்து விட்டது.
EMI வசதி
பொதுவாக, மாணவர்களுக்கான ஓராண்டு தனியார் பள்ளி கட்டணம், 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில், பல குடும்பங்களில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. மாத வருமானம் குறைந்ததால், பெற்றோரால் பள்ளிக்கான கட்டணத்தை ஒரே தவணையில் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில், கோல்கட்டாவை சேர்ந்த ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இத்தகைய வாய்ப்பு ஒன்று இருப்பதை கண்டுபிடித்து, அதற்கான திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு பின் தற்போது, இந்தத் திட்டம் நன்கு செயல்பட துவங்கியுள்ளது.
இதன்படி, இந்த வங்கியல்லாத நிதி நிறுவனம், பள்ளிகளோடு இணைந்து, இ.எம்.ஐ., வசதியை பெற்றோருக்கு வழங்குகிறது. அதாவது, நிதி நிறுவனம், மாணவனின் பள்ளிக்கான கட்டணத்தை முழுமையாக செலுத்தி விடும். இதற்கான, பிராசசிங் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை பள்ளியே ஏற்கும். பெற்றோர், இந்த நிதி நிறுவனத்துக்கு, ஆறு மாதம் முதல் 12 மாதங்கள் தவணையாக, பணத்தைத் திருப்பிச் செலுத்தினால் போதும்.
நாடு முழுதும், 3.5 லட்சம் தனியார் பள்ளிகள் உள்ளன. இதன் வாயிலாக பள்ளி கட்டண வர்த்தகம், 1.75 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், இந்த புதுமையான இ.எம்.ஐ., திட்டத்தை, பல மாநிலங்களில் விரிவுபடுத்த துவங்கியுள்ளன.
மேலும் படிக்க
Share your comments