முழு முதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. கணபதி ‘கணேசன்’ என்றால் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று பொருள். ‘க’ என்ற எழுத்து ஞானத்தை குறிக்கிறது. ண என்ற எழுத்து மோக்ஷத்தை குறிக்கிறது. ‘பதி’ என்ற வார்த்தை தலைவன் என்ற பொருளை குறிப்பிடுகிறது. ‘கணபதி’ என்றால் ஞானத்திற்கும் மோட்சத்திற்கு தலைவனாக பரப்பிரம்ம சொரூபம் ஆக இருப்பவர் என்று விளக்கம் கூறுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடுகிறோம்?
சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்றிருந்த போது பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், குளிப்பதற்காக வைத்திருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அதற்கு உயிர் வந்தது. அவ்வுருவத்தை பிள்ளையென பாவித்த பார்வதி தேவி, எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு நீராடச் சென்றுவிட்டார்.
அப்போது அங்கு வந்த சிவபெருமானை பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவன் பிள்ளையாரின் சிரத்தை கொய்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். நீராடி முடிந்ததும் வெளியே வந்த பார்வதி தேவி சிரச்சேதமுற்றுக் கிடந்த பிள்ளையார் கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட அனைத்தையும் அழிக்கத் தொடங்கினார்.
காளியின் ஆவேசத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து ‘வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு கட்டளையிட்டார். அதன்படி வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார்.
கணேசன் (Ganeshan)
இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு “கணேசன்” என பெயரிட்டு தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென ‘நாரத புராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது ஒரு ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தி திதியாகும். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம்.
விநாயகர் சிலையை நீரில் கரைப்பதற்கான அறிவியல் காரணம் என்ன?
நீரில் கரைப்பதன் அறிவியல் காரணம் விநாயகர் சிலையை நீரில் கரைப்பதற்கு அறிவியல் காரணங்களும் உண்டு. அதில் குறிப்பாக, ஆடிப்பெருக்கு அன்று வெள்ளம் ஏற்பட்டு ஆற்றில் உள்ள மணலை எல்லாம் வெள்ள நீர் அடித்துச் சென்றிடும். இதனால் அந்த இடத்தில் நீர் தங்காமல் நிலத்தடி நீர் குறைவு ஏற்படும். இதனைச் சீர் செய்யவே கெட்டியாகத் தங்கிடும் களிமண்ணினால் செய்த விநாயகர் சிலையைக் குறிப்பிட்ட நாட்கள் கழித்து ஆற்று நீர் உள்ளிட்ட நீர் நிலையில் கரைத்தனர்.
மேலும் படிக்க
நல்ல ஆரோக்கியத்திற்கு தினம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஈஷா விவசாய கருத்தரங்கம்: இயற்கையையும், நம் ஆரோக்கியத்தையும் காக்க இயற்கை விவசாயமே தீர்வு!
Share your comments