கையில் பரீட்சை அட்டை, தண்ணீர் பாட்டிலுடன் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ-வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாஜக-வினை சேர்ந்தவர் ராஜேஷ் மிஸ்ரா. தற்போது இவருக்கு வயது 51. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்திலுள்ள பித்ரி சைன்பூர் தொகுதியில் 2017 ஆம் ஆண்டு பாஜகவின் வேட்பாளராக களமிறங்கி எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அவருக்கு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக கட்சி பணிகளை ஆற்றி வரும் ராஜேஷ் மிஸ்ரா கல்வியிலும் மேற்கொண்டு படிக்க ஆர்வம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத கையில் ஹால்டிக்கெட், தண்ணீர் பாட்டில், பரீட்சை அட்டை என தேர்வு அறைக்கு முன் வந்து நின்றார் ராஜேஷ் மிஸ்ரா. தொடக்கத்தில் அங்கிருந்த மாணவர்கள், அவரை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்க பின்னர் தான் இவர் முன்னாள் எம்.எல்.ஏ என்பதை உணர்ந்தார்கள். அப்போது க்ளிக் செய்யப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இது குறித்து ராஜேஷ் மிஸ்ரா கூறுகையில், ”நான் எம்.எல்.ஏ-வாக இருந்த போது பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களுக்கு சரியான வழக்கறிஞர் கிடைக்காத காரணத்தினால் உரிய நீதியினை என்னால் பெற்றுத்தர முடியவில்லை என்பதை உணர்ந்தேன். அதன்பின் தான் நான் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. வழக்கறிஞராக வேண்டும் என்பதற்காக, அறிவியலில் தீவிர ஆர்வம் இருந்தபோதிலும் கலைப் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளேன்.
பொதுத் தேர்வுக்கு ஹிந்தி, நுண்கலை, சமூகவியல், குடிமையியல் மற்றும் சமூகவியல் பாடங்களை தேர்வு செய்துள்ளேன். இந்த பாடங்கள் எனக்கு சட்டப்படிப்புக்கும் உதவும்" என்றார்.
ராஜேஸ் மிஸ்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பட்டப்படிப்பு பயின்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு பேசிய ராஜேஸ் மிஸ்ரா, "நான் இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை படிக்கிறேன். பகலில் கூட படிப்பில் கவனம் செலுத்த நேரம் கிடைக்கும். எனது படிப்பிற்கு என் குழந்தைகள் பெரிதும் உதவுகிறார்கள். தேர்வில் சிறப்பாக செயல்படவும், தேர்வு பயத்தை குறைக்கவும் எனக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்கள்” என புன்னகைத்தார். மேலும் அரசியலில் தீவிரமாக ஈடுபடும் நிலையிலும், தேர்வில் வெற்றி பெற்று மேற்படிப்பினையும் தொடர்வேன் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார்.
"எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். இதையே இளம் மாணவர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். கவனத்துடன் பணிபுரிவதே வாழ்க்கையில் வெற்றிக்கான ஒரே மந்திரம்” என்றார் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா.
மேலும் காண்க:
ஜல்தபாரா தேசிய பூங்காவில் வாகனத்தை முட்டி மோதிய காண்டாமிருகம்- 7 பேர் படுகாயம்
இந்திய பசுக்களின் குடலில் “பாக்டீரியாவின் தொழிற்சாலை” உள்ளது- ஆளுநர் உரை
Share your comments