விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்பெறும் வகையில், சத்துக்கள் நிறைந்த கால்நடை தீவனமான அசோலா உற்பத்தி செய்ய உதவும் அசோலா வளர்ப்பு தொட்டி அமைத்து தரப்படுகிறது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், இவற்றை அமைத்து விவசாயிகள் பயனடையலாம்.
நடப்பாண்டில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி ஒன்றியத்தில், 50 அசோலா தொட்டிகள் அமைத்து தரப்படுகிறது. அப்பகுதியில் தற்போது விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோடை காலம் தொடங்குவதை அடுத்து பண்ணை குட்டைகள் அமைத்தல், தென்னந்தோப்பில் பாத்தி அமைத்தல், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகளுடன், கால்நடை தீவன உற்பத்திக்கு உதவியாக அசோலா வளர்ப்பு தொட்டிகளும் அமைத்து தரப்படுகிறது. இத்திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் என தகுதி உள்ளவர்கள் பயனடையலாம்.
கால்நடை தீவன செலவை குறைத்து தேவையான புரத சத்துக்களை அளிக்கிறது. அசோலா நீரில் மிதக்கும் பெரணி வகை உயிரினமாகும். வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கறவை மாடுகள், வாத்து, கோழிகள், முயல்கள், மீன்களுக்கு சிறந்த கலப்பு தீவனமாக இதனை பயன்படுத்துகின்றனர். இதில் கால்நடைகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் அமினோ அமிலங்கள் மற்றும் வளர்ச்சிக்கு தேவைப்படும் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவைகளும் உள்ளன. பசுந்தீவனம், உலர் மற்றும் அடர் தீவனத்துடன் அசோலாவையும் கலந்து புரதசத்து மிக்க தீவனமாக மாற்றி அளிக்கலாம்.
கால்நடை வளர்பில் ஈடுபட்டுள்ள இப்பகுதி விவசாயிகள், அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி தங்களின் தோட்டங்களில் அசோலா வளர்ப்பு தொட்டி அமைத்து பயனடையலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share your comments