புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே, குடிநீர் குழாயில் தண்ணீர் வீணாவதைத் தடுக்க ஏதுவாக, தண்ணீர் வரும்போது விசில் அடிக்கும் யுக்தியைக் கண்டுபிடித்து ஒரு ஆசிரியர் அசத்தியுள்ளார்.
குடிநீர் தட்டுப்பாடு என்பது நாடு முழுவதும் உள்ள நீண்ட காலப் பிரச்னை. எனவே நாள்தோறும் குடிநீருக்காகப் பெண்கள் குழாயடியில் காத்திருப்பது தொடர்கதையாகி வருகிறது.
குறித்த நேரம் இல்லாமல் நினைத்த நேரத்தில் தண்ணீர் வருவதும், குடிநீர் ஏற்றும் நிலையத்தில் ஏற்படும் கோளாறு, குடிநீர் குழாய் உடைப்பு என குடிநீர் எப்போது வரும் என தெரியாமல் தவிப்பதும் வாடிக்கை. அவ்வாறு தவித்து வந்தவர்களுக்கு விசில் மூலமாக தீர்வு கண்டுள்ளார் இந்த ஆசிரியர் பாலமுருகன். இவர் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள அன்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இதுகுறித்து பலமுருகன் கூறுகையில், எங்கள் ஊரில் குடிநீர் எப்போது திறந்துவிடப்படும் என்பது உறுதியாக தெரியாது. ஒரு சில நாட்கள் விடியல் காலை 3 மணிக்கு கூட குடிநீர் வரும். அப்போது தூக்கத்திலிருக்கும் கிராம மக்களுக்கு இது தெரியாது. காலையில் எழுந்து பார்த்தால் குழியில் தண்ணீர் நிரம்பி குட்டை போல் காட்சியளிக்கும். இதனை எவ்வாறு தடுக்கலாம், குடிநீரையும் சேமிக்கலாம் என யோசித்தபோது தோன்றியது தான் குடிநீர் குழாயில் விசில் பொருத்தும் யோசனை.
பொதுவாகவே தண்ணீர் குழாயில் குடிநீர் வருவதற்கு முன்பாகவே காற்று வரும். அப்படி காற்று வரும் போது இதனை கொண்டு குழாயில் விசில் ஒன்றைப் பொருத்தினேன். காற்றின் மூலமாக குடிநீர் வருவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பகவே விசில் அடிக்கின்றது, வீட்டிலிருப்பவர்கள் எழுந்து குடிநீரினை பிடிப்பதால் தண்ணீர் வீணாவதும், குடிநீர் பிடிக்காத ஏமாற்றத்தையும் தவிர்க்கமுடியும்.
இந்த முறையைப் பின்பற்றி குடிநீர் வீணாவதைப் பொதுமக்கள் தடுக்கலாம் என்றார்.
மேலும் படிக்க...
Share your comments