தெளிவான தொழில் திட்டம், குறைந்தபட்ச கல்வித் தகுதி, 650-க்கு மேல் சிபில் ஸ்கோர், குறைந்த முதலீடு ஆகியவை இருந்தால் போதும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு தொழிற்கடன்கள் திட்ட மதிப்பில் 25 சதவீதம் வரை மானியத்துடன் கிடைக்கின்றன. அதாவது 10 லட்சம் திட்ட மதிப்பு என்றால் ரூ.2.5 லட்சம் அரசு வழங்கும்.
UYEGP கடன் திட்டம் (UYEGP Loan Scheme)
UYEGP கடன் திட்டம் போன்ற மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் பற்றி விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்க தலைவர் 'அம்மன்' கருணாநிதி கூறியதாவது: மூன்று வகை கடன் திட்டங்களின் மூலம் பரவலாக கடன் வழங்கப்படுகிறது. ஒன்று UYEGP, இதற்கு வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் என்று பெயர். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களிடையே வேலையின்மை பிரச்னையை குறைப்பது இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் உற்பத்தித் தொழில், சேவைத் தொழில், வர்த்தகம் ஆகியவற்றுக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.5 லட்சம் வரை கடன் கிடைக்கும்.
தகுதி (Qualification)
- குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி
- குடும்ப வருவாய் ரூ.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
- பொதுப் பிரிவினர் எனில் வயது வரம்பு 18 - 35
- சிறப்புப் பிரிவினரான பெண்கள், சிறுபான்மையினர், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவ வீரர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் எனில் வயது வரம்பு 45 வரை ஆகும்.
சிறப்பம்சங்கள் (Highlights)
- பொதுப் பிரிவினர் கடன் மதிப்பில் 10% அளவிற்கும், சிறப்புப் பிரிவினர் எனில் 5% அளவிற்கு பங்களிக்க வேண்டும்.
- எம்.எஸ்.எம்.இ., வாயிலாக விண்ணப்பித்தால் வங்கிகளிடம் இருந்து கடன் உதவி பெற்றுத்தரப்படும். அதில் 25% மானியமாக கிடைக்கும். அதனை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.
- கடனுக்கு பதிவு செய்ய https://msmeonline.tn.gov.in/registration.php தளத்தை பார்வையிடவும்.
PMEGP கடன் திட்டம் (PMEGP Loan Scheme)
பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டமான இது மத்திய அரசின் உதவியுடன் செயல்படுகிறது. சுயதொழிலை ஊக்குவிப்பது, வேலைவாய்ப்பின்மையை குறைப்பது இதன் நோக்கம். மாநில அளவில் இதனை காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம், மாவட்ட தொழில் மையம், கயிறு வாரியம் மற்றும் வங்கிகள் செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தில் உற்பத்தித் துறை எனில் அதிகபட்சம் ரூ.50 லட்சமும், சேவைத் துறை, வர்த்தகம் எனில் அதிகபட்சம் ரூ.20 லட்சமும் மானியத்துடன் கடன் பெறலாம்.
தகுதிகள் (Qualification)
- ரூ.5 லட்சம் வரை கடன் பெற கல்வித் தகுதி தேவையில்லை.
- அதே சமயம் உற்பத்தித் துறை எனில் ரூ.10 லட்சத்திற்கு மேலும், சேவைத் துறை எனில் ரூ.5 லட்சத்திற்கு மேலும் கடன் பெறுவதற்கு 8ம் வகுப்பு கல்வித் தகுதியாக உள்ளது.
- தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் அல்லது திறன் மேம்பாட்டு திட்டங்களில் பயிற்சி முடிக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள் (Highlights)
- இதற்கான மானியம் ஊரகப் பகுதி எனில் பொதுப் பிரிவினருக்கு 25% மானியம், சிறப்புப் பிரிவினரான எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்களுக்கு - 35% மானியம்.
- நகர்ப்புறம் எனில் பொதுப் பிரிவினருக்கு 15% மானியம், சிறப்புப் பிரிவினருக்கு 25% மானியம் கிடைக்கும்.
- இத்திட்டத்தில் தான் அதிகபட்ச மானியம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
- கடன் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 5 முதல் 7 ஆண்டுகள் வரை கிடைக்கும்.
- மேலும் விவரங்களுக்கு https://kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp
- எந்தத் தொழில்களுக்கு கடன் கிடைக்கும் என்பதன் பட்டியல் இந்த இணைப்பில் கிடைக்கும்.
https://kviconline.gov.in/pmegp/pmegpweb/docs/jsp/newprojectReports.jsp
நீட்ஸ் திட்டம் (NEEDS Scheme)
புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்று இதனை கூறுவர். படித்த இளைஞர்களை, முதல் தலைமுறை தொழில்முனைவோராக மாற உதவுகிறது இத்திட்டம். புதிய குறு மற்றும் சிறு நிறுவனங்கள் இதில் பயன்பெறலாம்.
தகுதிகள் (Qualification)
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஏதாவது ஒரு பட்டம், டிப்ளமோ, ஐடிஐ அல்லது தொழில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- வயது: 21 - 35 பொதுப் பிரிவினருக்கு, பெண்களை உள்ளடக்கிய சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை இருக்கலாம்.
- கூட்டு நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலே கூறிய பி.எம்.இ.ஜி.பி., தாட்கோ உட்பட வேறு மத்திய மாநில அரசுகளின் திட்டங்களில் பயன்பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
சிறப்பம்சங்கள் (Highlights)
- குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை மானியத்துடன் கடன் கிடைக்கும்.
- நிறுவனர்கள் பொதுப் பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பில் 10% தொகையை பங்களிக்க வேண்டும்.
- சிறப்புப் பிரிவினர் எனில் 5% தொகையை வழங்க வேண்டும்.
- கடன் தொகையில் 25% மானியமாக வழங்கப்படும்.
- கடன் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 9 ஆண்டுகள் வரை இருக்கும்.
மேலும் படிக்க
ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
Post Office: மாதந்தோறும் வருமானம் கிடைக்க சிறப்பான அஞ்சலக திட்டம்!
Share your comments