தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தரிசாக உள்ள நிலங்களை உழவு செய்து தயார் படுத்தி வைக்குமாறு மதுரை வேளாண் அறிவியல் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள், சட்டிக்கலப்பை மூலம் கோடை உழவு செய்து நிலத்தை தயார் படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முந்தைய பருவத்தில் பயன்படுத்திய களைக்கொல்லிகள் போன்றவற்றின் நச்சுப் தன்மையை செயலிழக்கச் செய்ய முடியும். அதுமட்டுமல்லாது மண்ணில் மறைந்திருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், கூண்டுப்புழுக்கள் போன்றவற்றையும் எளிதில் அழித்து விடலாம். அத்துடன் மண்வளத்தை பாதிக்கும் களைச்செடிகள் மற்றும் அதன் விதைகளையும் அழித்து விடலாம்.மேலும் மழை நீரானது வளி மண்டலத்தில் நிறைந்துள்ள நைட்ரேட் என்ற வேதிப்பொருளுடன் இணைந்து மண்ணில் உள்ள தழைச்சத்தைதினை அதிகரிக்கச் செய்யும். விளை நிலத்தின் மேல்மண் வளம் பாதுகாக்க கோடை உழவு அவசியமாகும்.
போதிய நீர்ப்பாசன வசதி உள்ளவர்கள் வாய்ப்புள்ள இடங்களில் சிறுதானியங்கள், எள், நிலக்கடலை, சூரியகாந்தி, உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்றவற்றை பயிரிடலாம் என வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
Share your comments