மாத சம்பளம் வாங்குவோரால் மிகவும் விரும்பப்படும் முதலீடு ஊழியர் வருங்கால வைப்பு நிதியம் (இபிஎஃப்) ஆகும். குறைந்தபட்சம் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட அனைத்து நிறுவனங்களும் இபிஎஃப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை. இந்த திட்டம் தனிநபர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை தவறாமல் சேமிக்க உதவுகிறது. மேலும் இது தனிநபர்களின் ஓய்வுக்குப் பிறகு ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு போதுமான நிதியை வழங்க ஒருங்கிணைக்கிறது.
பிஎஃப் வரி விகிதங்கள்
அனைத்து தொழிலாளர்களும் ஒரே விதமான சம்பளத்தை பெறுவதில்லை. சிலர் அதிகமான சம்பளத்தையும், சிலர் குறைவான சம்பளத்தையும் பெறுவார்கள். அவர்கள் பெரும் சம்பளத்தில் 12% சதவீதத்தை PF தொகையாக பிடித்தம் செய்வார்கள். அதே அளவு 12% தொகையை உங்கள் நிறுவனத்தின் (Employer) சார்பிலும் PFகணக்கில் செலுத்தப்படும். நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் 12 சதவீதத்தில் 8.33% பென்ஷன் திட்டத்திலும், 3.67% வருங்கால வைப்பு திட்டத்திலும் செலுத்தப்படும். இந்த தொகைகளை சேர்த்து வருங்கால வைப்பு ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். குறைந்தபட்சமாக மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் பிடித்தம் செய்யப்படும்.
நீங்கள் பிஎஃப் பணத்தை வீட்டு கடனை அடைப்பதற்கு, குழந்தைகளின் கல்வி செலவு, லைப் இன்சுரன்ஸ் பீரியமிம் (Life insurance premium) போன்ற காரணங்களுக்காக எடுக்க விரும்பினால் ஒரு வருடத்திற்கு 1.50 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம். EPFO சேமிப்புத் திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80c கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இது PF பணத்திற்கான முக்கிய சிறப்பம்சம். அதேபோல் பணியாளரின் கணக்கில் நிறுவனங்கள் செலுத்தும் தொகை ரூ. 7.50 லட்சத்தை எட்டினால், ஊழியருக்கு வரி விதிக்கப்படும். உங்கள் ஈபிஎஃப் கணக்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயலற்ற நிலையில் இருந்தாலும் வட்டி வழங்கப்படும். ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வந்தாலோ, நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினாலும், இபிஎஃப் கணக்கில் இருந்து எடுக்கும் பணத்திற்கு வரி கிடையாது.
பென்ஷன் பயன்கள்
திட்டத்தின் கீழ் பென்ஷன் பெறப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. பென்ஷன் பெற விரும்புபவர்கள் 58 வயது வரை காத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 வருடம் வரை ஈபிஎப் திட்டத்தில் பங்களிப்பு அளித்து இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் பெற முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட ஈபிஎப் கணக்கை வைத்து இருக்க முடியாது. தனது வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் (Pension) பெற முடியும்.
காப்பீடு சலுகை
இது பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) என்று அழைக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்குப் உரிமையாளர் இறக்கும் பொது பிஎப் சந்தாதாரின் வாரிசுகள் EDLI காப்பீடு மூலம் தொகையை பெறலாம். பிஎப் சந்தாதார் இறந்த பிறகு அவரது 30 மடங்கு அடிப்படை சம்பளம் + அகவிலைப்படியைக் கணக்கிட்டு அளிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் போனஸ் தொகையாக 1,50,000 ரூபாய் அளிக்கப்படும். காப்பீடு பிரீமியம் தொகை அனைவருக்கும் சமமானதே ஆகும். EDLI காப்பீட்டினை பெறும் போது பிஎப் சந்தாரர் இறக்கும் வரை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்து இருக்க வேண்டும். படிவத்தில் நிறுவனத்தின் அத்தாட்சி இருக்க வேண்டும். நிறுவனத்தில் அத்தாட்சி பெற முடியவில்லை என்றால் கெசட் அலுவலரிடம் பெறலாம்.
75% பிஎப் பணத்தை எடுக்கலாம்
வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் பிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் 75 சதவீத பணத்தினை இடையில் எடுத்துக்கொள்ளலாம். மீதம் உள்ள தொகையினை 2 மாதங்களுக்கு வேலைக் கிடைக்கவில்லை என்றால் எடுத்துக்கொள்ளலாம். இடையில் பிஎப் பணத்தினை எடுக்க அனுமதி அளித்தாலும் தேர்ந்தெடுக்கும் காரணங்களைப் பொருத்துப் பிஎப் பண எடுப்பதற்கான சதவீதம் மாறும். தற்போது திருமணத்திற்காகப் பிஎப் பணத்தினை இடையில் எடுத்தால் 50 சதவீதம் மட்டுமே எடுக்க முடியும். இதற்கு ஊழியர்கள் தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பிஎப் கணக்கினை நிர்வகித்து இருக்க வேண்டும்.
பிஎப் வட்டிவிகிதம்
மாத சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் பெருமளவிலான தொகை ஒவ்வொரு மாதமும் EPF-க்குச் செல்லும் நிலையில், மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் ஈபிஎப் கணக்கில் இருக்கும் தொகைக்கு வட்டி வருமானத்தை அளிக்கும். அதன்படி 2020-2021 நிதியாண்டுக்கான காலகட்டத்திற்கு 8.50 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்க ஈபிஎப்ஓ அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. வங்கிகளின் FD க்கான வட்டியை ஒப்பிடும் போது இபிஎப் வட்டி அதிகமாகும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வருமான வரியை சட்ட ரீதியாக எப்படி சேமிக்கலாம்? சூப்பர் டிப்ஸ்!
ஓய்வு காலத்தில் மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்க அருமையான திட்டம்!
Share your comments