பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதத்துடன் பென்சன் வழங்கும், புதிய பென்சன் திட்டத்தை சில மாதங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தெரிவித்துள்ளது. 2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இதன் கீழ், பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பென்சன் மற்றும் பல்வேறு பலன்கள் கிடைத்து வந்தன.
புதிய பென்சன் திட்டம் (New Pension Scheme)
2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக தேசிய பென்சன் திட்டம் (National Pension System) தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தில் ஓய்வூதியமும் கிடைப்பதில்லை, சலுகைகளும் இல்லை என்பது அரசு ஊழியர்கள் கூறும் புகார். எனவே மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உள்பட மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில், தேசிய பென்சன் திட்டத்தில் இருந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களும் வெளியேறியுள்ளதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோபத்யாய் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதத்துடன் பென்சன் வழங்கும் புதிய பென்சன் திட்டத்தை தொடங்குவதற்கு PFRDA திட்டமிட்டுள்ளதாக சுப்ரதீம் பந்தோபத்யாய் தெரிவித்துள்ளார். இத்திட்டம் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
பென்சனர்களுக்கு குட் நியூஸ்: 80 வயதைக் கடந்தால் கூடுதல் பென்சன்!
மீண்டும் உயர்ந்தது ரெப்போ வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
Share your comments