தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை நீரை சேமித்து பயன் பெற வேண்டும் என தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொள்ளாச்சி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மழை நீர் சேமிப்புக்கு வேளாண்துறையில் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மழை நீரை சேமிக்க, பண்ணைக்குட்டைகள் அமைத்தல், சிறு குளம் வெட்டுதல், கசிவு நீர் குட்டை அமைத்தல், சம உயர வரப்பு அமைத்தல், தடுப்பணை கட்டுதல் போன்ற உத்திகள் கையாளப்படுகின்றன. இவற்றில் விவசாயிகளுக்கு அதிக பலன் தருவது, மழை நீரை முழுவதுமாக வீணாக்காமல் விளைநிலங்களுக்கே அளிக்கக்கூடியதாக இருப்பது பண்ணை குட்டைகள் ஆகும். அனைத்து விவசாய நிலங்களில், 60 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து, அதன்மேல் மழை நீரை சேமித்து வைத்துக்கொள்ள மானியம் வழங்கப் படுகிறது. 300 மைக்ரான் அடர்த்தியுள்ள பாலித்தீன் சீட் கொண்டு பண்ணைக்குட்டை அமைக்க ரூபாய் 75,000 மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது.
மானியத்துடன் கூடிய பண்ணைக் குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேழும் விண்ணப்பிக்கும் போது பட்டா நகல், அடங்கல் மற்றும் புலவரை பட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறார்கள். திட்டம் குறித்த விரிவான தகவல்களை பெற 96775 84169, 99420 56460 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share your comments