புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 50% மானியத்தில் நெல் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் உழவுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நிலத்திற்கு தேவையான தழைச்சத்து அளிக்கும் சணப்பு மற்றும் தக்கைப் பூண்டு சாகுபடி செய்து மடக்கி உழது மண்ணை வளப்படுத்தி நெல் சாகுபடிக்கு தயார் நிலைக்கு வைக்கும்படி வேளாண் இயக்குனர் கேட்டுக் கொண்டார்.
சம்பா பருவத்தில் மானாவாரியாக நெல் சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு, சம்பா தாளடிக்கு ஏற்ற நீண்ட கால மற்றும் மத்திய கால நெல் ரகங்களான டி.கே.எம்.-13 ரகங்களை விதைக் கிராம திட்டத்தின் மூலம் 50% மானியத்தில் பெற்று விதைக்கலாம் என்றார். மேலும் தேவையான விதைகள், நுண்சத்து உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
நடவு மூலம் நெல் சாகுபடி செய்வோர் இயந்திர நடவு செய்து, செயல் விளக்கத்திடல் அமைத்தால் ஹெக்டேருக்கு ரூ.5,000 வரை பின்னேற்பு மானியமாகப் வழங்கப் படும் என்றார். நேரடி நெல் விதைப்பில் விதைப்புக் கருவிகளை பயன்படுத்தி விதைத்து செயல் விளக்கத் திடல்கள் அமைப்பதன் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.1500 வரை பின்னேற்பு மானியமாக பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தி தழைச்சத்து மற்றும் உரத் தேவையைக் குறைக்கலாம் என்றார்.
விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டம், ஓய்வூதியத் திட்டத்தில் சேராதவா்கள், பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம் மற்றும் கிஷான் கிரிடிட் கார்டு பெறாதவர்கள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப் பட்டது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments