2040-க்குள் பிளாஸ்டிக் மாசுபாடு 80 % குறைக்கப்படுவதற்கான வழிமுறைகள் குறித்த அறிக்கையினை ஐ.நா. வெளியிட்டுள்ளது.
பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உலகம் புதிய ஒன்றினை தொடர்ந்து தேடும் நிலையில், தற்போதுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 2040 ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மாசுபாட்டை 80% குறைக்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) அதிகாரிகள், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிவதற்கான உறுதியான நடைமுறைகள், சந்தை மாற்றங்கள் மற்றும் கொள்கைகளின் தீர்வுகளை மையமாகக் கொண்ட பகுப்பாய்வை மேற்கொண்டனர்.
பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தம் தொடர்பாக பாரிஸில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
"நாம் தயாரிக்கும் பிளாஸ்டிக், பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோக பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்கை அகற்றும் முறை சுற்றுச்சூழல் அமைப்புகளை மாசுபடுத்துகிறது, மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்துகளை உருவாக்குகிறது மற்றும் காலநிலையை சீர்குலைக்கிறது" என்று UNEP நிர்வாக இயக்குனர் இங்கர் ஆண்டர்சன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் குறைப்பு தொடர்பான ஒரு "வட்ட" பொருளாதாரத்தை உருவாக்க தேவையான மூன்று முக்கிய சந்தை மாற்றங்கள் குறித்து அறிக்கையானது கவனம் செலுத்துகிறது. சிக்கல் நிறைந்த மற்றும் தேவையற்ற பிளாஸ்டிக்குகளை நீக்கிவிட்டு, மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் மறுசீரமைப்பு ஆகிய மூன்று சந்தை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைக்கும் வகையில், மீண்டும் நிரப்பக்கூடிய பாட்டில் அமைப்புகள் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலுக்கு டெபாசிட் தொகை போன்ற திட்டங்கள் மூலம் மறுபயன்பாட்டு விருப்பங்களை அரசாங்கம் ஊக்குவிக்க தீவிரமாக முன்வந்தால் 2040 ஆம் ஆண்டளவில் 30 சதவீத பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் என்று UNEP மதிப்பிட்டுள்ளது.
மறுசுழற்சியானது "அதிக நிலையான மற்றும் லாபகரமான முயற்சியாக" மாறினால், புதைபடிவ எரிபொருள் மானியங்கள் அகற்றப்பட்டால், அந்த ஆண்டில் கூடுதலாக 20% அடைய முடியும் என்றும், பிளாஸ்டிக் உறைகள் மற்றும் சாச்செட்டுகள் (ஷாம்பு, ஆயில் பாக்கெட்டுகள்) போன்ற பொருட்களை மக்கும் பொருட்களாக மாற்றினால் கூடுதலாக 17 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டப் பொருளாதாரத்திற்கு மாறினால் $1.27 டிரில்லியன் சேமிப்பு கிடைக்கும். INC2 எனப்படும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மே 29 முதல் ஜூன் 2 வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"பிளாஸ்டிக் மாசு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் உட்பட, இந்த வரைபடத்தை நாம் பின்பற்றினால், பெரிய பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் வெற்றிகளை வழங்க முடியும்" என்று UNEP நிர்வாக இயக்குனர் இங்கர் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
pic courtesy: https://www.flickr.com/photos/26344495@N05/51233134120/
மேலும் காண்க:
38-ல் இருந்து 42- அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்வர்
Share your comments