கோடை வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்லாது, பயிர்களையும் பெருமளவில் பாதிக்கின்றன. எனவே வேளாண் அதிகாரிகள் பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்க பூசா ஹைட்ரோ ஜெல்லை மணலோடு கலந்து பயன்படுத்துவதன் மூலம் 70 சதவீதம் தண்ணீர் மிச்சப்படுத்தி பயிர்களை பாதுகாக்கலாம், என தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகரித்ததை தொடர்ந்து நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் அன்றாட பயன்பாட்டிற்கே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் பெரும்பாலான விவசாயிகள் நடவு செய்வதை தற்காலிகமாக கை விட்டுள்ளனர். ஏற்கனவே நடவு செய்த பயிர்களுக்கான நீரை விலைக்கு வாங்கி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேளாண் துறை இதற்கு தீர்வு காணும் வகையில், கோடையில் பயிர்களை வறட்சியின் பிடியிலிருந்து காப்பாற்றவும், குறைவான தண்ணீரை பயன்படுத்துவதற்கும் ஆலோசனை வழங்கி உள்ளது. அதன் படி விவசாயிகள் பூசா ஹைட்ரோ ஜெல் மூலம் இதற்கான தீர்வை பெற இயலும். இந்த ஜெல் காண்பதற்கு வெள்ளை நிறத்தில் மணல் குருணை போன்று இருக்கும். இதனை ஒரு ஏக்கர் நிலத்திற்கு 100 கிராம் என்ற அளவில் மணலோடு கலந்து விளை நிலத்தில் பரப்பினால் போதும். அது நிலத்தில் பாய்ச்சும் நீரை ஊறிஞ்சி வைத்து கொண்டு, விரைவில் ஆவியாகாமல் மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. இவற்றின் மூலம் பயிர்ககள் 15 முதல் 20 நாட்கள் வரை வாடாமல் இருக்கிறது. இவ்வகை ஜெல்லை விவசாயிகள் மானிய விலையில் வேளாண் கிடங்குகளில் வாங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share your comments