
தகுந்த காரணமும், உரிய விளக்கமின்றி ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் பயணியருக்கு ரயில்வே நிர்வாகம் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரயில் பயணம் (Train travel)
பொதுவாகப் பாதுகாப்பான மற்றும் குறைவானக் கட்டணத்தில் பாமரர் முதல் பணப்பாரர் வரை பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே நாடுமுழுவதும் பல இடங்களை இணைக்கும் விதமாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாகப் பாதுகாப்பான பயணம் என்பதால், வெளியூர் செல்ல விரும்பும், எல்லாத் தரப்பினரும், எப்போதுமே ரயில் பயணத்தைத் தேர்வு செய்வர்.
தாமதத்தின் விளைவு (The effect of delay)
மற்றப் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது, ரயில் பயணத்தில் எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை, முன்கூட்டியேத் தெரிக்காமல் ரயில்கள் தாமதமாக வருவதுதான். இதனால், நாம் சென்றுசேர வேண்டிய இடத்திற்கு தாமதமாகச் செல்வதுடன், எப்போது சென்றடைவோமோ என்ற குழப்பத்துடன் பயணம் செய்ய நேரும்.
இதனால் பலநேரங்களில் பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையும் ஏற்படும். அதேநேரத்தில் சென்று சேரும் இடத்தில் இருந்து, மற்றொருப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தால், மிகுந்த சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். ஒருவேளை, அந்தப் பயணத்தையேக் கைவிடும் நிலையும் ஏற்படும்.
அசத்தல் உத்தரவு (Strange order)
இந்தக் குறையைப் போக்க புதிய உத்தரவை அளித்துள்ளது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தில் இந்த அறிவிப்பு, ரயில் பயணிகளை ஆறுதலடையச் செய்துள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த நபர் கடந்த 2016ல் குடும்பத்துடன் ரயிலில் ஜம்மு சென்றார். அந்த ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக ஜம்மு சென்றடைந்தது. இதனால் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்ல அவர்கள் முன்பதிவு செய்திருந்த விமானத்தைத் தவறவிட்டனர். இதையடுத்து வாடகை காரில் அதிக தொகை செலவு செய்து ஸ்ரீநகர் சென்றடைந்தனர். மேலும் தால் ஏரியில் படகு சவாரிக்கான முன்பதிவும் ரத்தானது.
வழக்கு (Case)
ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால் குடும்பத்தினருடன் கடும் அவதிக்கு உள்ளான அந்த நபர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றத்தில் முறையீடு செய்தார். பாதிக்கப்பட்ட நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரயில்வே நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு பின்வரும் உத்தரவைப் பிறப்பித்தனர்.
விளக்கம் இல்லை (No explanation)
இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இது போட்டி நிறைந்த காலகட்டம். பொது போக்குவரத்துத் துறையில் தனியாருடன் போட்டி போட வேண்டுமானால் ரயில்வே நிர்வாகம் பணி செய்யும் முறையை மேம்படுத்த வேண்டும்.
அதிகாரிகளின் கருணையில் பயணியர் இருக்க முடியாது. தவறுகளுக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும். இந்திய ரயில்வேயில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த தாமதத்திற்கு சரியான விளக்கங்கள் இல்லை.
இழப்பீடு (Compensation)
எனவே இனிமேல், உரிய விளக்கமின்றி ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் பயணியருக்கு ரயில்வே நிர்வாகம் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் ராஜஸ்தானைச் சேர்ந்த அந்தப் பயணிக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர். இந்த அறிவிப்பு உச்சநீதிமன்றத்தின் உத்தரவோடு மட்டும் நின்றுவிடாமல், நடைமுறைக்கும் வந்தால், ரயில் பயணிகள் பயனடைவார்கள்.
மேலும் படிக்க...
தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்!
வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- அமேசானின் அசத்தல் ஏற்பாடு!
Share your comments