பறவைகளுக்காக பட்டாசு (Crackers) வெடிக்காத கிராமமாக ஆண்டாண்டு காலமாக பெரம்பூர் கிராமம் இருந்து வருகிறது. மயிலாடுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தில் சாலை மற்றும் தெருக்களில் அதிகளவில் வேம்பு, புளியமரம், தென்னை மரங்கள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து, மீண்டும் தனது குஞ்சுகளுடன் சென்று விடும்.
கூடுகட்டி இனப்பெருக்கம்
பெரம்பூர் கிராமத்துக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நத்தைகொத்தி நாரை, கொக்கு, பாம்புத்தாரா உள்ளிட்ட அபூர்வ வகையான பறவைகள் வந்து மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் ஓரளவுக்கு வளர்ந்து பறக்கும் வரை பறவைகள் பாதுகாப்பாக வளர்த்து வருகின்றன. இதைத்தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு தனது குஞ்சுகளுடன் பறவைகள் சென்று விடுகின்றன.
இந்நிலையில் பெரம்பூர் கிராமத்துக்கு நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும் கொக்கு, மடையான், காகம் மற்றும் நீர்காக்கைகள் உள்ளிட்ட பறவைகள் வந்து தங்கி கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து கொண்டு தாயகத்துக்கு திரும்பி விடுகின்றன. மீண்டும் இதேபோல் இனப்பெருக்க காலத்தில் பெரம்பூருக்கு வந்து தங்குகின்றன.
முழு ஒத்துழைப்பு
தீபாவளியன்று (Diwali) பெரம்பூர் கிராமத்தில் பொதுமக்கள் பட்டாசு (Crackers) வெடிப்பது கிடையாது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் 25க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து தங்குகின்றன. இந்த பறவைகளை காக்க கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இங்குள்ள மக்களின் காதுகளில் 24 மணி நேரமும் இனிமையான குரல் ஒலித்து கொண்டே இருக்கும். இந்த கிராமத்துக்குள் வந்து யாரும் பறவைகளை தொந்தரவு செய்ய முடியாது. யாராவது பறவைகளை வேட்டையாட நினைத்தால் கிராம மக்கள் அவர்களை விரட்டியடிப்பர். ஒவ்வொரு தீபாவளியன்றும் இந்த கிராமத்தில் பட்டாசு வெடிப்பது கிடையாது. பட்டாசு வெடித்தால் பறவைகளுக்கு பயம் ஏற்பட்டு வெளியேறி விடும். எனவே பறவைகளை காப்பாற்றும் வகையில் இந்த கிராமத்தில் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. ஆண்டாண்டு காலமாக பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறோம் என்றனர்.
மேலும் படிக்க
இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!
தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு!
Share your comments