கரூரில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
அரசு முனைப்பு (Government initiative)
கொரோனாவை முற்றிலும் ஒழிக்கத் தமிழக அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாநில மக்கள் அனைவரையும், கொரோனாத் தடுப்பூசியைப் போடவைத்து, இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
ஆலோசனைக் கூட்டம்
இதன் ஒருபகுதியாக, கரூர் மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி நடத்தப்படவுள்ள மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமைச் சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
தடுப்பூசி முகாம் (Vaccination camp)
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: வரும் 10-ம் தேதி 5-ம் கட்டத் தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த முகாமின்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீத இலக்கை எய்திடும் வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.
அதற்கான வாக்குச்சாவடி அளவிலான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
கணக்கெடுக்க வேண்டும். இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய காலம் வந்த பிறகும் செலுத்தாதவர்களின் பெயர், முகவரி, அலைபேசி எண், ஆதார் எண் போன்ற விவரங்கள் குறித்து வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து, சேகரிக்க வேண்டும்.
ஊக்கத்தொகை (Incentive)
கணக்கெடுப்பாளர் தடுப்பூசி முகாமிற்கு எத்தனை நபர்களை அழைத்து வருகின்றார்களோ அதற்குத் தகுந்தாற்போல் ஒரு நபருக்கு ரூ.5 வீதம் கணக்கெடுப்பாளருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
கண்கவர் பரிசுகள் (Spectacular gifts)
மேலும், அன்றைய முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு முதல் பரிசாகத் துணி துவைக்கும் இயந்திரம் (வாஷிங் மிஷின்), 2-ம் பரிசாக கிரைண்டர், 3-ம் பரிசாக மிக்ஸி, 4-ம் பரிசாக 25 நபர்களுக்கு குக்கர், ஆறுதல் பரிசாக 100 பேருக்குப் பாத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
25-க்கும் மேற்பட்ட நபர்களைத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாமிற்கு அழைத்து வந்தால் அவருடைய பெயரும் குலுக்கலில் சேர்க்கப்படும். 5-ம் கட்ட முகாமின் மூலம் 100 சதவீத இலக்கைக் கரூர் மாவட்டம் எட்ட அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
ஏமாற்றும் கணவனை மனைவி கொலை செய்யலாம்! அதிரடி சட்டம்!
டிரெண்டிங் மோகம் - ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து கொண்ட நபர்!
Share your comments