இன்றைய கால கட்டத்தில் இரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலையில் தான் விவசாயிகள் உள்ளனர். முறையான மண்பரிசோதனை செய்து அதன் உரப்பரிந்துரை முடிவுகளுக்கு ஏற்ப செயல்படுவதன் மூலம் மண்வளம் பாதுக்காக்கப்படுவதோடு, கணிசமாக உரச்செலவும் குறையும்.
மண்பரிசோதனை செய்யாத விவசாயிகள் வேளாண்துறையால் பரிந்துரைக்கபட்ட பயிர்களுக்கான பொது உர பரிந்துரையினை பின்பற்ற வேண்டும். உரங்களின் விலையும் நாளுக்கு நாள் ஏறுமுகமாக தான் உள்ளது.வாங்கிய உரங்களை பயிருக்கு எப்படி? எந்த முறையில் இடுவது?என்பது குறித்து வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திரசேகரன் விரிவாக குறிப்பிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
உரமிடும் முறைகள்:
- அடியுரமிடுதல்
- விதைக்கு அருகில் உரமிடுதல்
- மேலுரமிடுதல்
- இலை வண்ண அட்டைக்கேற்ப உரமிடுதல்
- இலை வழித்தெளிப்பு
மண்ணில் அடியுரமாக இடுதல்:
பொதுவாக எந்த பயிர் சாகுபடி செய்யப்பட்டாலும் அடியுரம் இடுவது (BASAL DRESSING) நல்லது. விதைக்கப்பட்ட விதைகள் துரிதமாக வேர் வளர்ச்சி வளர பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தில் பாதியும், மணிசத்து முழுவதுமாக இட வேண்டும். தேவைக்கேற்ப, பரிந்துரைக்க பட்ட சாம்பல்சத்து இடலாம்.
இவ்வாறு அடியுரமாக இடுவதால் பயிர்கள் தங்களுடைய வளர்ச்சிக்கு தேவையான ஊட்டங்களை மண்ணில் இருந்து எடுத்து நன்றாக வளர்வதுடன் குறிப்பிட்ட நாளில் அறுவடைக்கு வரும். சில சமயங்களில் அடி மண்ணில் உரங்களை வைக்கலாம். அமில நிலங்களில் இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது. மணிசத்து (P) மற்றும் சாம்பல் சத்து (K) முழுமையாக இடுவதால் உரங்களின் பயன்பாடு பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
விதைக்கு அருகே உரமிடுதல்:
விதைக்கப்பட்ட விதைக்கு அருகிலோ அல்லது செடிகளுக்கு அருகிலோ இந்த முறையில் குறைவான உரங்களை வைக்கலாம் (SPOT APPLICATION). இதனால் உரங்கள் வீணாகுவது தடுக்கப்படுவதுடன், களை வளர்ச்சியும் மட்டுப்படும். சொட்டுநீர் பாசனம் மூலமாகவும் பயிருக்கு நீர்வழியாக உரமிடுவதால் பயிர் நன்றாக வளர்வதுடன், உர உபயோகத்திறன் அதிகரிக்கும். உர விரயமும் தடுக்கப்படுகிறது.
மேலுரமிடுதல் (TOP DRESSING):
நெல் போன்ற தானிய பயிர்களுக்கு விதைத்த 25, 45-வது நாளில் மேலுரமிடுவது சிறந்தது. பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை ஒரு பாகத்தை அடியுரமாக இட்டபின் மீதமுள்ள இரண்டு பாகங்களில் ஒரு பாகத்தை 25-வது நாளிலும், மற்றொரு பாகத்தை 45-வது நாளிலும் இடலாம். இவற்றின் பயன்பாடு முழுமையாக கிடைத்திட 5:4:1 என்ற அளவில் யூரியா, வேப்பம் புண்ணாக்கு, ஜிப்சம் கலந்து இட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை பயிரின் வளர்ச்சிக்கேற்ப பிரித்து பிரித்து இடுவதால் பயிரில் பூச்சி/ நோய் தாக்குதல் குறையும்.
இலை வண்ண அட்டை (Leaf Colour Chart -LCC):
இந்த அட்டையின் கலரும், நெல் பயிரின் தோகையின் கலருடன் ஒப்பிட்டு பார்த்து உரமிடுவதால் வீண் விரயம் தடுக்கப்படுகிறது.
இலை வழித்தெளிப்பு (Foliar spray):
காய்கறிகள், பூச்செடிகளுக்கு வளர்ச்சிக்கேற்ப இலைவழித் தெளிப்பாக உரமிடுவதால் சுற்றுப்புற சூழலும் பாதிப்பின்றி மண் வளம் கெடாமல் பாதுகாக்க இயலும். பயிரின் தேவைக்கேற்ப உரமிடுவதால் உரங்களுக்கான செலவும் கணிசமாக குறையும்.
எனவே விவசாயிகள் தங்களுடைய பயிரின் தன்மைகேற்ப உரங்களை அளவுக்கு மீறி தூவி விடாமல் பாதுகாப்பான முறையில் இடுவதால் பயிரின் வளர்ச்சியுடன், சாகுபடிக்கான உற்பத்தி செலவும் கணிசமாக குறையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/முரண்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களை பின்வரும் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 9443570289)
Read more:
இயற்கையின் அற்புத கொடை "பூஞ்சைகள்” - ஏன் தெரியுமா?
டிரெண்டாகும் அரக்கு காபி- எங்க விளையுது? என்ன சிறப்புனு தெரியுமா?
Share your comments