agricultural produce sale through NAFED and e-NAM system
உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தொகுப்பில் விருதுநகர் மாவட்ட த்தில் NAFED மூலம் பாசிப்பயறு கொள்முதல், சேலத்தில் நடைப்பெறும் பல்வேறு விளைப்பொருட்களின் ஏலம் குறித்த தகவல்கள் மற்றும் e-NAM திட்டத்தில் நெல் (அட்சய பொன்னி) விற்பனை தொடர்பான தகவல்கள் உள்ளன. அவற்றின் முழு விவரம் பின்வருமாறு-
NAFED - பாசிப்பயறு கொள்முதல்:
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தலா 200 மெட்ரிக் டன் வீதம் 400 மெட்ரிக் டன் பாசிப்பயறு, விலை ஆதார திட்டம் காரிப் 2023-24 ன்கீழ் NAFED மூலம் 01.09.2023 முதல் 29.11.2023 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
எனவே சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதி விவசாயிகள் தங்களது விளைபொருளான பாசிப்பயறை கிலோ ஒன்றுக்கு (ரூ.85.58) என்ற குறைந்த பட்ச ஆதார விலையில் விற்பனை செய்திட உரிய ஆவணங்களுடன் சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 9003356172 என்ற எண்ணிலும், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 8248369001 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயனடைய விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலத்தில் மறைமுக ஏலம்:
சேலம் விற்பனைக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி, வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளம், ஆத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை, ஆமணக்கு, நெல், மக்காச்சோளம், மஞ்சள், ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்ப்பருப்பு மற்றும் மஞ்சள் ஆகிய விளைபொருட்களுக்கான மறைமுக ஏலம் நாளை 14.09.2023 வியாழன் அன்று நடைபெறுகிறது.
எனவே, சேலம், வாழப்பாடி, ஆத்தூர் மற்றும் ஓமலூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டு தங்கள் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு முதுநிலை செயலாளர் / வேளாண்மை துணை இயக்குநர் (சேலம் விற்பனைக்குழு, சேலம்) தெரிவித்துள்ளனர்.
e-NAM திட்டத்தில் அட்சய பொன்னி:
திண்டுக்கல் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது நெல் (அட்சய பொன்னி) விளைபொருளை குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2000 /-க்கு விற்பனை செய்து பயனடைந்துள்ளனர். எனவே விவசாயிகள் நத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு செயலாளர்( திண்டுக்கல் விற்பனைக்குழு, திண்டுக்கல்) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவன் செயலியில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசின் மானியத்திட்டங்கள், தங்கள் பகுதி வேளாண் விளைப்பொருள் ஏல அறிவிப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களும் இச்செயலியில் உள்ளன.
மேலும் காண்க:
கெட்டுப்போன பாலினை உங்கள் தோட்டத்துக்கு உரமாக மாற்றணுமா?
Today gold Rate: தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.320 குறைந்தது!
Share your comments