தென்னை, பனை மர காப்பீட்டு திட்டத்தின் கீழ் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்துகொள்ள வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் 12 வட்டாரங்களிலும் சுமார் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சி, நோய்த் தாக்குதல், இயற்கை பேரிடா் போன்ற பாதிப்புகளால் தென்னை விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனா் இழப்பில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தென்னை மரங்களை காப்பீடு செய்வது அவசியம் என்று வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இது தொடா்பாக வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி கூறியதாவது, வடகிழக்கு பருவ மழை விரைவில் தீவிரமாகி பலத்த காற்று வீசுவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து விவசாயிகளும் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்றார்.
காப்பீடு விதிமுறைகள்
-
குட்டை, ஒட்டுரக மரங்களை 4 ஆம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7 ஆம் ஆண்டு முதல் 60 ஆண்டுகள் வரையில் காப்பீடு செய்யலாம்.
-
ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய ஆரோக்கியமான மரங்களை காப்பீடு செய்துகொள்ளலாம். ஹெக்டேருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும்.
-
4 அல்லது 7 வயது முதல் 15 வயது வரையுள்ள மரங்களில் மரம் ஒன்றுக்கு ரூ.2.25ம், 16 முதல் 60 வயதுள்ள மரங்களில் மரம் ஒன்றுக்கு ரூ.3.50ம் காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும்.
-
4 அல்லது 7 முதல் 15 வயதுள்ள மரம் ஒன்றுக்கு ரூ.900, 16 முதல் 60 வயதுள்ள மரம் ஒன்றுக்கு ரூ.1,750 இழப்பீடு தொகை வழங்கப்படும்.
-
காப்பீட்டுக் கட்டணத்தை அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட், சென்னை என்ற நிறுவனத்தில் பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும்.
-
காப்பீடு செய்ய வேண்டிய தென்னை மரங்களை வண்ணம் பூசி 1,2,3 என எண்கள் குறிப்பிட்டு ஒவ்வொரு மரத்துடனும் விவசாயி புகைப்படம் எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
காப்பீடு செய்வதற்கான முன்மொழி படிவத்துடன் ஆதாா் அட்டை நகல், சிட்டா, அடங்கல், புல எண் வரைபடம், விவசாயியின் புகைப்படம், சுய அறிவிப்பு கடிதம், வட்டார வேளாண் உதவி இயக்குநரின் காப்பீட்டு திட்டத்துக்கான சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், காப்பீட்டு கட்டணத்துக்கான வங்கி வரைவோலை இணைத்து அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா, சென்னை என்ற நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களை அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறினார்.
மேலும் படிக்க..
Nivar cyclone : புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது எப்படி?
புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!
Nivar Cyclone: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - 13 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!!
Share your comments