உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் கருப்பு கோதுமை பயிரிட விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றனர் வேளாண் துறை அதிகாரிகள். இதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
கருப்பு கோதுமை பஞ்சாபின் மொஹாலியில் உள்ள தேசிய வேளாண்-உணவு பயோடெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (NABI) விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கோதுமை வகைகளுடன் ஒப்பிடுகையில், கருப்பு கோதுமை சிறந்த ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதிக சந்தை மதிப்பு கொண்டதாக அறியப்படுகிறது.
அக்டோபர் 24, 2023 அன்று ஊடகங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உத்தரகாசி மாவட்ட மாஜிஸ்திரேட் அபிஷேக் ரூஹெலா, துண்டா தொகுதியின் ஜென்வாலா கிராமத்தில் கருப்பு கோதுமை சாகுபடியில் சேர விவசாயிகளை ஊக்குவித்து கருப்பு கோதுமை விதைகளை விநியோகித்துள்ளார்.
சாதாரண கோதுமையை விட சுமார் 3 மடங்கு அதிகமான வருமானத்தை கருப்பு கோதுமை மூலம் விவசாயிகள் பெற இயலும் என்கிற நோக்கத்துடன் உத்தரகாசி மாவட்டத்தில் துண்டா மற்றும் நவ்கான் தொகுதிகளில் உள்ள 20 கிராமங்களில் முன்னோடி திட்டமாக இது தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதே மாவட்டத்தில் உள்ள கங்கை பள்ளத்தாக்குக்கு பகுதியில் சிகப்பு அரிசியினை பயிரிடும் முயற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கருப்பு கோதுமை சாகுபடி நடைமுறை தொடங்கியுள்ளது.
கருப்பு கோதுமையின் பயன்கள்: கருப்பு கோதுமையில் பாஸ்பரஸ் நல்ல அளவில் உள்ளது. மேலும் கருப்பு கோதுமையில் உள்ள புரதம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் மனித உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கின்றன மற்றும் இரத்த பற்றாக்குறையை நீக்கி ஆக்ஸிஜனின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.
"பாரம்பரிய கோதுமை வகைகளின் மதிப்பு காலப்போக்கில் குறைந்துவிட்டது, குறிப்பாக மலைப்பகுதிகளில், அரசு உணவுப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் பலர் குறைந்த அல்லது விலையற்ற உணவு தானியங்களைப் பெறுகிறார்கள்" என்று உத்தரகாசியின் தலைமை வேளாண் அதிகாரி ஜே.பி. திவாரி கூறினார். ”அதிக போக்குவரத்து செலவுகள் மற்றும் குறைந்த குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) காரணமாக முக்கிய நகரங்களில் உள்ள மொத்த சந்தைகளில் உணவு தானியங்களை விற்பது பெரும்பாலும் லாபகரமானதாக இல்லை” எனவும் திவாரி தெரிவித்துள்ளார்.
"இதைக் கருத்தில் கொண்டு, கருப்பு கோதுமை மற்றும் சிவப்பு அரிசி போன்ற பாரம்பரிய பயிர்களுக்கு வணிக மாற்றுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாவட்டத்தில் புதிய விவசாய முறைகளை மேம்படுத்துவதில் வேளாண்துறை கவனம் செலுத்துகிறது," என்று திவாரி கூறினார்.
இந்திய அரசாங்கம் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் கோதுமைக்கான ஏலக் கொள்முதல் அளவினை 200 டன்னாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் கோதுமை விலை உயர்வினை கட்டுப்படுத்தவும், சந்தையில் இருப்பினை அதிகரிக்கவும் முடியும் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more :
கயிலாங்க் கடை பொருட்கள் மூலம் காரை உருவாக்கிய இயற்கை விவசாயி
நபார்டு வங்கி நிதியுதவியுடன் 40 நவீன நெல் சேமிப்புத் தளம்- அரசாணை வெளியீடு!
Share your comments