
கோடை உழவு செய்வதால், மண்ணில் நீர்ப் பிடிப்புத் தன்மை அதிகரிப்பதோடு, பயிர்கள் செழித்து வளரும்," என, விவசாயிகளுக்கு வேளாண்மை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, மேட்டுப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை உழவு செய்ய, இது ஏற்ற தருணமாகும். கோடை மழையை பயன்படுத்தி, உழவு செய்வது மிகவும் அவசியமாகும். முதலில் வயலில் இரும்பு கலப்பை கொண்டோ அல்லது டிராக்டர் வாயிலாக குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக, புழுதிபட உழவு செய்ய வேண்டும்.
பூச்சி அதிகரிப்பு தடுக்கப்படும்
இவ்வாறு செய்வதால், புல், பூண்டுகள் வேர் அறுபட்டு, காய்ந்து கருகி விடும். கடினத் தன்மையுள்ள மண் கட்டிகள் உடைந்து, பொலபொலப்புத் தன்மை அடைகிறது. பயிர்ப் பருவ காலங்களில், சில வகை பூச்சிகளின் புழுக்கள், மண்ணுக்குள் சென்று, கூண்டுப் புழுவாக மாறி வளர்ந்து கொண்டிருக்கும். கோடை உழவு செய்வதன் வாயிலாக, இவ்வகை கூண்டுப் புழுக்கள், மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்படுகின்றன. அவை, பறவைகளால் பிடித்துத் தின்னப்பட்டு, அழிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, அடுத்த பயிர் சாகுபடியின்போது, பூச்சிகளின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது. களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன.
நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கும்
மேலும், மண்ணில் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது. மழை நீர் பூமிக்குள் சென்று, மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. மண்ணின் பவுதிக தன்மை மேம்படுகிறது. நாற்றங்கால் மற்றும் நடவு, வயல் தயாரிப்பு, மிகவும் எளிதாகிறது.
உரம் சமச்சீராகும்
மண் பொலபொலப்புத் தன்மையைப் பெறுவதால், அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யும் பயிருக்கு, இடும் உரம் சமச்சீராக கிடைக்கும். இதனால், பயிர் செழித்து வளர்ந்து, மகசூல் அதிகரிக்கும். எனவே, விவசாயிகள் தவறாது, கோடை உழவு செய்து, பயன்பெற வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments