தர்மபுரி மாவட்டம் கடத்தூர் வட்டாரத்தில் புட்ரெட்டிபட்டி என்ற கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு பாதிப்பு இருப்பதை அறிந்து பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்திலிருந்து திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா.அ.வெண்ணிலா, முனைவர் த.செந்தில்குமார் (இணை பேராசிரியர்) மற்றும் பயிற்சி உதவியாளருடன் (09.10.2024) அன்று வயல்வெளி ஆய்வு செய்யப்பட்டு விவசாயிக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஃபால் ஆர்மிவார்ம் என்ற படைப்புழுவானது மக்காச்சோளம் மட்டுமின்றி சோளம், நெல், கரும்பு, பருத்தி, சோயா, கடலை, கோதுமை, வெங்காயம், முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு, தக்காளி, சிறுதானியப்பயிர்கள் உள்ளிட்ட 80 வகையான பயிர்களைத் தாக்கி சேதத்தை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.
பாதிப்பின் அறிகுறிகள்:
இளம் புழுக்கள் அதிகமாக இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டித் தின்று சேதத்தை விளைவிக்கும். இதனால் இலைகளில் பச்சையம் இல்லாமல் வெண்மையாகக் காணப்படும். மூன்று முதல் ஆறாம் நிலைப் புழுக்கள் இலையுறையினுள் சென்று கடித்துண்டு பாதிப்பை உண்டாக்கும். அதனால் இலைகள் விரியும்போது வரிசையாக சிறு துளைகள் போன்று காணப்படும். மேலும் புழுவின் கழிவுகளும் காணப்படும். 20 முதல் 40 நாட்களுடைய இளம் பயிரையே இவை அதிகமாகத் தாக்கும் வல்லமை கொண்டவை.
இந்நிலையில் புட்ரெட்டிபட்டி கிராமத்தில் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் படைப்புழுவின் தாக்கமானது மக்காச்சோளத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த படைப்புழுவை கட்டுப்படுத்த பின்வரும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
- வயலை ஆழ உழவு செய்து கடைசி உழவில் வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இட வேண்டும்.
- விதைகளை தையோமீத்தாக்ஸாம் 10 கிராம் அல்லது பிவேரியா பெஸ்ஸியானா 10 கிராம் ஒரு கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்
- விதை நேர்த்தி செய்த விதைகளை நடும்போது பத்து வரிசைக்கு ஒரு வரிசை இடைவெளி விட்டு நட வேண்டும்.
- அதிக அளவில் ஆண் பூச்சிகளை கவர, இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் விதைத்த ஒரு வாரத்திற்குள் வைத்தல் வேண்டும்.
- வரப்பில் தட்டைப்பயிர், சூரியகாந்தி, எள் போன்றவற்றை பயிர்களை விதைக்கலாம் மற்றும் ஊடுபயிராக உளுந்து பாசிப்பயறு பயிரிடலாம்.
- பூச்சிக்கொல்லி மருந்துகள் முதல் முறை (15-20 நாட்கள்) அஸாடிராக்டின் (ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி ) அல்லது தையோடிகார்ப் (ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம்) தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- இரண்டாம் முறை (40-45 நாட்கள்) மெட்டாரைசியம் அனிசோபிலியே (5 கிலோ, ஏக்கர் அல்லது புளுபென்டியமைடு (ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி) என்ற அளவில் தெளிக்கவும்
- தேவைப்பட்டால் கதிர் பிடிக்கும் பருவத்தில் இரண்டாவது முறைக்கு பரிந்துரைக்கப்பட் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒன்றை சுழற்சி முறையில் உபயோகிக்கவும்.
மேற்குறிப்பிட்ட முறைகளை பின்பற்றி மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் போது மொரப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் உடன் இருந்தனர். (தகவல்: v.நாகராஜன். அக்ரி,ஓமலூர்,சேலம்,9965261373)
Read more:
1400 பெண் பயனாளிகளுக்கு 50 % மானியத்தில் கோழிக்குஞ்சுகள்- ஆட்சியர் அறிவிப்பு!
கோமியத்தினை பயிர்களுக்கு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
Share your comments