பழங்காலத்தில் வெங்காயப் படல் முறையில் (Onion peel method), வெங்காயத்தை சேமித்து வைத்து, நல்ல விலை வரும் போது, விவசாயிகள் விற்பனை செய்வார்கள். நீண்ட காலம், வெங்காயம் அழுகி விடாமல் பாதுகாக்க, வெங்காயப் படல் முறைப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தப் படல் முறை, விதை சேமிப்பிற்கும் (Seed storage), சிறப்பான பங்காற்றி வந்தது. தற்போது, வெங்காயத்தைப் பாதுகாக்க யாரும் முன்வருவதில்லை. குறைந்த விலைக்குக் கூட விவசாயிகள், விற்பனை செய்து விடுகின்றனர். ஆனால், படல் முறையைப் பயன்படுத்தினால், நிச்சயம் விவசாயிகள் இலாபம் அடையலாம்.
படல் முறை நடைமுறையில் உள்ள பகுதிகள்:
அந்தக் காலத்தில், கொங்கு வட்டாரப் பகுதிகளில், நடைமுறையில் இருந்த வெங்காயப் படல் முறை, இப்போது அரிதாகி விட்டது. இப்படல் முறை இன்றும், சில கொங்கு வட்டாரப் பகுதிகளில் மட்டும் தான் நடைமுறையில் இருக்கிறது. மேலும், கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகே இருக்கின்ற, ஊர்களில் இன்றளவும் இம்முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் நரசிபுரம், ஆலாந்துறை, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம், திருச்சி மாவட்டத்தில் துறையூர், ராசிபுரம், வையப்பமலை, திருப்பூர், கொடுவாய்ப் பகுதிகளில் இன்றும் படல் போட்டு, வெங்காயத்தை பாதுகாப்பது வழக்கம்.
படல் போடும் முறை:
படல் போடுவதற்கு, முதலில் செம்மண்ணை (Shrimp) அடியில் போட்டு, மேடாக்க வேண்டும். அதன் பிறகு, இரண்டு அடிக்கு ஒரு கல் (Stone) என வைக்க வேண்டும். கருங்கல், குண்டுக்கல் அல்லது ஹாலோபிளாக் கல் என, எதையும் பயன்படுத்தலாம். அந்தக் கல்லுக்கு மேலே, இரண்டு அடியில் மூங்கிலால் (Bamboo) செய்த தப்பை அல்லது பாக்கு மரத்தில் செய்த தப்பை, அடி படலுக்கு போட வேண்டும். அடி படலுக்கு ஒட்டி இரண்டு பக்கமும், மூங்கில் சீம்புவை வைத்து, படலை மறைக்க வேண்டும். மூங்கில் சீம்புவை, மூங்கில் பக்க மாரு அல்லது கொழுந்து மாருவில் செய்வார்கள். இரு பக்கமும் உள்ள மூங்கில் சீம்புவின் பக்கவாட்டில், படலைத் தாங்கிப் பிடிப்பதற்காக மூங்கில் கட்டையை வைத்து ஊனச் செய்ய வேண்டும். இப்படித் தான் படல் போட வேண்டும்.
மூங்கில் சீம்புவின் சிறப்பம்சம்:
மூங்கில் சீம்புவிற்கு பதிலாக, ஓடு மற்றும் தென்னந்தகட்டையும் பயன்படுத்தலாம். ஒட்டன்சத்திரத்தில் தென்னந்தகடு வைத்து தான் படலை மறைக்கின்றனர். ஆனால், மூங்கில் சீம்புவைப் பயன்படுத்தினால், வெங்காயத்திற்கு காற்று சீராகச் செல்லும். அதனால், வெங்காயமும் நல்ல நிலையில் இருக்கும். மூங்கில் சீம்புவை, உடுமலைப்பேட்டை பகுதிகளில் செய்து, விற்பனை செய்கிறார்கள்.
வெங்காயத்தை பாதுகாக்கும் முறை:
படல் போடுவதற்கு முன்னரே, வெங்காயத்தை அறுவடை (Harvest) செய்து, தாள் கிள்ளி, களத்து மேட்டில் போட்டு காய வைத்து, படலில் போட வேண்டும். மழைக்காலத்தில், வெங்காயத்தை அறுவடை செய்தால், படலுக்கு பக்கத்தில் உள்ள, களத்து மேட்டில் இரண்டு நாள் காய வைக்க வேண்டும். பிறகு, வெங்காயத்தின் மீதுள்ள, மேல் மண் விழுந்ததும், படலில் போட்டு வைப்பார்கள். வெங்காயத்திற்கு நல்ல விலை வந்தால் மட்டும் தான், படலைப் பிரித்து வெங்காயத்தை வெளியில் எடுப்பார்கள். இரண்டு மாதங்கள் ஆனாலும் சரி, ஆறு மாதங்கள் ஆனாலும் சரி, வெங்காயம் அழுகாமல் நல்ல நிலையில் இருக்கும்.
விதை சேமிக்கும் யுக்தி:
நல்ல விலை வந்ததும், படலில் இருக்கும் வெங்காயத்தை எடுத்து, விற்பனை செய்யலாம். விற்பனை செய்த வெங்காயம் போக, மீதியுள்ள வெங்காயத்தை வைத்து, அடுத்த நடப்புக்கும் பயன்படுத்தலாம். வெங்காயத்திற்கு படல் போடும் இம்முறையில், வெங்காயத்தை பாதுகாப்பதோடு, விதையையும் சேமிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும். இந்தக் கால விவசாயிகளும், இந்தப் படல் முறையைப் பயன்படுத்தி, வெங்காயத்தைப் பாதுகாத்து நல்ல விலையில் விற்று, இலாபம் பெற முன்வர வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
விவசாயிகளின் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது, வரப்பை வெட்டிப் பூசும் நவீன இயந்திரம்!
நிலக்கடலையில் சுண்ணாம்பு மற்றும் கந்தகச் சத்துக்களை அதிகப்படுத்தும் வழிகளை அறிந்து கொள்வோம்!
Share your comments