மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகத் தேங்காய்களைக் கொள்முதல் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
ஆதார விலையில் கொள்முதல் (Purchase at the Support price)
தமிழ்நாட்டில் தற்போது தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின் கீழ் நேரடியாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்து இதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தது.
இதன் அடிப்படையில், கோவை, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில், தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகத் தேங்காய் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.
தர நிர்ணயம் (Quality determination)
விலை அரவைக் கொப்பரைக்குக் கிலோ ஒன்றுக்கு ரூ.99.60 எனவும், பந்து கொப்பரைக்கு ரூ.103 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தர நிர்ணயமாக அரவைக் கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.மேலும் வைக்கோல், தூசு, நார் போன்ற அயல் பொருட்கள் அதிகபட்சமாக 1 சதவீதம் மட்டும் அனுமதிக்கப்படும்.
பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லு கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம். பந்து கொப்பரையின் ஈரப்பதம் அதிகபட்சமாக 7 சதவீதம் இருக்கலாம். இவற்றின் சுற்றளவு குறைந்தபட்சம் 75 மில்லி மீட்டர் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
சிட்டா
-
பயிர் சாகுபடி அடங்கல்
-
ஆதார் நகல்
-
வங்கிக் கணக்கு புத்தக விவர நகல்
அலுவலர்கள் மூலம் தர ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு அதற்கான விலை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
டிசம்பர் மாதம் வரை கொள்முதல் (Purchase until December)
இந்த நேரடி கொள்முதல் பணிகள் வருகிற வரும் டிசம்பர் மாதம் 23ந் தேதி வரை, தொடர்ந்து ஆறு மாதம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் தேங்காய்களை ஒப்படைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு
சேலம் மாவட்டத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் 1,550 டன் கொப்பரை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். கொள்முதல் பணியானது சேலம், வாழப்பாடி, மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வார நாளில் கொள்முதல் முகமை செயல்படும்.
விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்துடன், சேலம், 90803 23535, வாழப்பாடி, 91593 56156, மேச்சேரி, 95438 12911 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம் என்றார்.
இதேபோல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையின் படி, சிவகங்கை விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி பகுதியில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சுமார் 400 மெட்ரிக் டன் வீதம் கொள்முதல் செய்யப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர்கள்- உங்கள் கவனத்திற்கு
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை- சாகுபடி செய்வது எப்படி?
வீடியோ மூலம் வீட்டிற்கு வந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் இ-சஞ்சீவனி திட்டம்
Share your comments