தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் இயற்கை விவசாய முறைகளை கையாண்டு, நல்ல மகசூலை எடுத்து வருகின்றனர். வேறு எந்த தொழில் வளமும் இல்லாத தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. தருமபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 4 லட்சத்து 49 ஆயிரத்து 777 ஹெக்டேரில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 740 ஹெக்டேர் சாகுபடி (Cultivation) பரப்பாக உள்ளது.
இயற்கை விவசாய முறை:
தருமபுரி மாவட்டத்தில் மழையை மட்டுமே நம்பி மேற்கொள்ளப்படும் மானாவாரி விவசாயமே, அதிகம் நடைபெற்று வருகிறது. பல்வேறு பூச்சிக் கொல்லி மருந்துகள், ரசாயன உரங்களின் தொடர் பயன்பாட்டால் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் காலப்போக்கில் தரிசு நிலங்களாக மாறிப் போயின. மேலும், புற்றுநோய் (Cancer) உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகளும், ரசாயன உரங்களும் காரணமாக இருந்து வருகின்றன. இந்நிலையில், மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் இயற்கை விவசாய முறைகளை (organic farming) கையாண்டு, நல்ல மகசூலை (Yield) எடுத்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் தாதநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தருமன் (Dharuman) என்ற விவசாயி, தனது 5 ஏக்கர் நிலத்தில், முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார். 5 அடுக்கு முறையில் காய்கறிகள் பயிரிட்டும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அதை சிறந்த முறையில் பயிரிட்டும் சாதனை படைத்து வருகிறார்.
செலவு குறைவு:
தற்போது, கருப்பு கவுனி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா மற்றும் வாழையில் பப்பாளி ஊடுபயிராகவும் (intercropping), தக்காளி, பீர்க்கன் உள்ளிட்ட தோட்டக்கலை (Horticulture) பயிர்களையும், இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறார்கள். அரசு, இயற்கை விவசாய முறைகளை ஊக்கப்படுத்தி அதன் பயன்களை விவசாயிகள் மத்தியில் எடுத்துச் செல்ல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பூச்சிக் கொல்லி மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் செலவுகள் குறையும் என்பதே உண்மை.
விவசாயிகள் கோரிக்கை:
அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயதிற்கு திரும்ப வேண்டும் என்றும், இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த (market) அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இண்டூர் அடுத்துள்ள ராஜாகொல்ல அள்ளியைச் சேர்ந்த விவசாயியும், சுற்றுச் சூழல் ஆய்வாளருமான முனைவர் செந்தில்குமார் (Sendhilkumar) பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரும், தன் நிலத்தின், ஒன்றரை ஏக்கரில் கருப்பு கவுனி நெல்லை சாகுபடி (Cultivation) செய்துள்ளார்.
இதே போன்று நாகர்கூடல், எச்சன அள்ளி, அன்னசாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், மொரப்பூர், கம்பைநல்லூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் பலர் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் மீண்டும் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்வதும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதும் விவசாயிகள் தினத்தில் ஆறுதலாக இருக்கின்றது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தென்னை நார் தொழிலில் வருமான வாய்ப்பு! மதிப்புக் கூட்டினால் நல்ல இலாபம்!
சாகுபடியில் சாதிக்கும் விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!
அரசுப் பள்ளியில் இயற்கை காய்கறித் தோட்டம்! அசத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள்!
Share your comments