கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட, பயறு வகை பயிர்களில், மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை, வேளாண் துறை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு சம்பா நெல் அறுவடைக்கு பின், பயறு வகைகளை, அதிக அளவில் சாகுபடி செய்வதற்கு, தமிழக அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. தற்போது பயறு வகை பயிர்களில், மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மஞ்சள் தேமல் நோய்
பாதிக்கப்பட்ட பயிர்களில், முதலில் இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றி, பின்னர் இலை முழுதும் திட்டு திட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும், பச்சையும் கலந்த பகுதிகளாக மாறும். செடிகளின் இளம் பருவத்தில் நோய் தோன்றினால், செடிகள் முழுதுமாக பாதிக்கப்பட்டு, பெருமளவு மகசூல் இழப்பு ஏற்படும். இந்த மஞ்சள் தேமல் நோயானது வெள்ளை ஈக்களால் பரவக்கூடியது என்பதால், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதே, இந்நோயை கட்டுப்படுத்த சிறந்த வழிமுறை.
கட்டுப்படுத்தும் யுக்திகள் (Controlling tactics)
மஞ்சள் தேமல் நோய் தாக்குதலை, தாங்கி வளரக்கூடிய 'வம்பன், 6, 7, 8' போன்ற உளுந்து ரகங்களையும், 'கோ 6' பாசிப்பயறு ரகத்தையும் சாகுபடி செய்ய வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். பயறு விதைப்புக்கு நடுவில், ஏழு வரிசைக்கு ஒரு வரிசை சோளப்பயிரை தடுப்புப் பயிராக விதைத்தால், வைரஸ் பரப்பும் பூச்சிகளை தவிர்க்கலாம்.
விதைக்கும் முன், 'இமிடாகுளோப்ரிட் 600 எப்.எஸ்.,' என்ற மருந்தை கிலோவுக்கு, 5 மிலி என்ற அளவில் கலந்து, விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்l நோய் பாதிப்பு தெரிந்தவுடன், 'இமிடாகுளோப்ரிட் 17.5 எஸ்.எல்.,' அல்லது 'டைமெத்தயோட் 30 இசி 500 மிலி' அல்லது 'தையோமீதாக்சம் 75 டபிள்யு ஜி 100 கிராம்' என்ற அளவில், காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்து கட்டுப்படுத்தலாம். எனவே, நடப்பு பருவத்தில், பயறு வகைகளை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், மேற்கண்ட முறைகளை பின்பற்றி, மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தலாம். நோய் அறிகுறி தென்பட்டால், அருகில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அல்லது வேளாண் விரிவாக்க அலுவலர்களை அணுகலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்!
Share your comments