அஸ்வகந்தா ஒரு மூலிகை பயிர் என்றே சொல்லலாம். சந்தைகளில் இதன் தேவை 7000 டன்களாக இருக்கும் நிலையில் இன்றளவும் உற்பத்தி என்னமோ வெறும் 1500 டன்களாகவே இருக்கிறது. எனவே விவசாயத் தொழிலில் ஈடுப்பட்டுள்ள நபர்களுக்கு அஸ்வகந்தா பலன் தரும் மூலிகை பயிராக இருக்கும் என கருதப்படுகிறது.
அஸ்வகந்தா முக்கியமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நிலப்பரப்பில் நன்கு செழித்து வளரும். இது பொதுவாக மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தூக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் நினைவாற்றல், வீக்கத்தைக் குறைத்தல், இரத்த சர்க்கரையை நிர்வகித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளாகவும் அஸ்வகந்தாவில் உள்ளன.
அஸ்வகந்தாவின் வேர்கள், இலைகள் மற்றும் விதைகளானது அதன் மருத்துவ பண்புகளுக்காகவும், மற்ற நன்மை பயக்கும் அம்சங்களுக்காகவும் அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் குறைந்த முதலீட்டில் லாபம் பார்க்கும் ஒரு விவசாய நடைமுறையாக அஸ்வகந்தா மாறியுள்ளது.
அஸ்வகந்தா விவசாயத்தில் ஈடுபடுவோர் அறிந்துக்கொள்ள வேண்டியவை:
அஸ்வகந்தா - சொலானேசியே குடும்ப வகையைச் சேர்ந்தது. தக்காளியை போன்று இதுவும் இலையுதிரா தாவரம். அஸ்வகந்தாவினை அதிகம் பயிரிடும் மாநிலமாக மஹாராஷ்டிரா திகழ்கிறது. அஸ்வகந்தாவில் மிகவும் புகழ்பெற்ற இரகமாக கருதப்படுபவை ஜவகர் அஸந்தா 20, டபிள்யூ எஸ் 22 (WS22), சிமாப் டபிள்யூ எஸ் 10 - ரக்சிதா.
இந்த மூலிகையானது அதிகமாக கரிசல் அல்லது சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரும் தன்மையுடையது. மேலும் நன்கு வடிகால் வசதி கொண்ட மண்களே சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும். மண்ணில் அமிலக்கார அளவு தன்மையானது 7.5 முதல் 8 வரை இருத்தல் வேண்டும்.
மற்ற மூலிகை விவசாய பயிருடன் ஒப்பிடுகையில் அஸ்வகந்தாவிற்கு குறைந்த பராமரிப்பே தேவைப்படுகிறது. மேலும், இவை அதிகமாக மிதவெப்பமண்டல பகுதிகளில் நன்றாக வளரும். பெரும்பாலும் மழைபருவத்திற்கு பின்னரே பயிரிடப்படுகிறது. அஸ்வகந்தாவினை நல்ல முறையில் சாகுபடி செய்ய ஒரளவு மழைப்பொழிவு பகுதியே போதுமானது.
அஸ்வகந்தாவினை பயிரிடும் முறைகள்:
அஸ்வகந்தா விதைகளை நேரடியாக நிலத்தில் விதைத்தல் மூலமாகவும் அல்லது தனியாக நாற்றங்கால் அமைத்து நாற்றுகளை உற்பத்தி செய்தும் பயிர் செய்யலாம். தற்போது இந்தியாவில் இது பெரும்பாலும் மானாவாரிப்பயிராக தான் விதைக்கப்படுகிறது. விதைப்பு முறையில் ஒரு எக்டருக்கு 10- 12 கிலோ விதைகளை பயன்படுத்தலாம். நாற்றாங்கால் முறையில் உயர்மட்ட பாத்திகள் அமைத்தல் அவசியம். 42 நாட்கள் ஆன நாற்றுகளை நாற்றாங்காலில் இருந்து நடவு வயலில் குறிப்பிட்ட இடைவெளியில் நடவு செய்வது அவசியம். இதுத்தொடர்பான தெளிவான விளக்கங்களுக்கு அருகிலுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தினை தொடர்புக் கொள்ளலாம்.
உரங்கள் என தனியாக அஸ்வகந்தாவிற்கு எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்தியாவில் அஸ்வகந்தாவினை அதிகம் பயிரிடும் மஹாராஷ்டிரா மாநில விவசாயிகள் எவ்வித உரமும் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடவு செய்த 30 நாட்களில் ஒரு முறையும், அடுத்த 30 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறையும் களை எடுத்தல் வேண்டும். அறுவடையானது பொதுவாக ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைப்பெறுகிறது. ஒரு ஹெக்டருக்கு சராசரியாக 300 முதல் 500 கிலோ வரையிலான உலர்த்தப்பட்ட வேரும், 50 முதல் 75 கிலோ வரையிலான விதையும் மகசூலாக கிடைக்கும்.
வெற்றிகரமான அஸ்வகந்தா விவசாயத்திற்கு மண்ணின் தரம், காலநிலை, சாகுபடி நுட்பங்கள் மற்றும் பூச்சி மேலாண்மை போன்ற காரணிகளில் கவனமாக இருத்தல் அவசியம். எனவே அஸ்வகந்தா விவசாயத்தில் ஈடுபட விரும்பினால் அதுத்தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அருகிலுள்ள தோட்டக்கலைத்துறை அலுவலரை தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள்.
இதையும் காண்க:
எம்.டி. (சித்தா) மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு
Share your comments