இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாடுகளில் சிறப்புக்குரிய விஷயங்களில் ஒன்று ஒவ்வொரு பகுதியிலும், பிராந்திய சூழலுக்கு ஏற்றவாறு விவசாய பணிகளை மேற்கொள்வது என்று சொல்லாம். சமீபத்தில் கிரிஷி ஜாக்ரன் குழு ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்த விவசாயி ஒருவருடன் நேர்க்காணல் மேற்கொண்டது.
எங்கள் ஊரின் கரும்புதான் நாட்டிலயே இனிப்பானது, அரசாங்கத்திடம் இருந்து கடன் வாங்கி கிணறு தோண்டி விவசாய பணிகளை மேற்கொள்கிறேன், என அடுத்தடுத்து தனது பேச்சால் நம்மை வியப்பில் ஆழ்த்தினார் விவசாயி மேதிராம். அவருடன் மேற்கொண்ட நேர்க்காணலின் விவரம் பின்வருமாறு-
மந்த்கௌலா கரும்புக்கு தனி மவுசு:
ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் உள்ள மந்த்கௌலா கிராமத்தைச் சேர்ந்த முற்போக்கு விவசாயி தான் மேதிராம். இங்குள்ள நிலம் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக இல்லாமல் இருந்ததாக குறிப்பிட்ட மேதிராம், “இங்கு மண் தரிசாக இருந்ததால், உரம் உள்ளிட்ட பிற உபகரணங்களின் பங்களிப்போடு கடின உழைப்பினை போட்டு ஒவ்வொரு விவசாயியும் இப்பகுதியினை வளமானதாக மாற்றியுள்ளோம்” என்றார்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தானியங்கி முறைகளை வேளாண் பணிகளில் கடைப்பிடிப்பதால் நல்ல மகசூலும் பெற முடிகிறது என்றார். பல்வால் மாவட்ட பகுதியில் இயல்பாகவே தண்ணீருக்கு ஒரு இதமான சுவை இருப்பதாகவும் , அதனால் இங்குள்ள பல விவசாயிகள் பயிரிடும் பயிர்கள் பெரும்பாலும் நல்ல சுவையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதுக்குறித்து விளக்கமாக குறிப்பிட முடியுமா? என்று நாம் வினவிய போது, மசூர் மந்த்கௌலா கரும்புகளின் சிறப்பு பற்றி விரிவாக விளக்கினார். ”எங்கள் ஊரின் கரும்புதான் நாட்டிலயே இனிப்பானது. எங்கள் பகுதியில் இருந்து கரும்பு வாங்க நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். மேலும், நமது பண்ணையில் இருந்து கரும்புகளை எப்போது சந்தைக்கு கொண்டு சென்றாலும், சந்தையில் அதற்கு நல்ல டிமாண்ட் உள்ளதாகவும், அதன் மூலம் நல்ல விலையை பெற முடிகிறது” என்றார்.
மேலும் கூறுகையில், “இப்பகுதியில் கரும்பு தான் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் கரும்பு வாங்க மந்த்கௌலாவுக்கு வருகிறார்கள். மந்த்கௌலாவில் கரும்புக்கு அதிக கிராக்கி ஏற்படுவதற்கு இங்குள்ள இனிப்பு நீர்தான் முக்கிய காரணம். நாங்கள் எங்கள் வயல்களில் கிணற்று நீரால் கரும்பு சாகுபடி செய்கிறோம், மற்ற பகுதிகளில் கால்வாய்கள் மற்றும் ரசாயனங்களின் உதவியுடன் கரும்பு சாகுபடி செய்கிறார்கள். இதனால் கரும்பு பெரியளவில் இனிக்காது, கரும்பு உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. அதே சமயம் எங்கள் பகுதி விவசாயிகள் கிணற்று நீரை கொண்டு கரும்பு பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்கிறார்கள். இதன் காரணமாக எங்கள் பகுதியின் கரும்புக்கு நல்ல சுவை இருப்பதோடு, விளைச்சலும் நன்றாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
Read more: இஸ்ரேலிய முறையில் அவகேடோ சாகுபடி- ஆண்டுக்கு 1 கோடி வருமானம்!
கிணறு தோண்ட அரசின் நிதியுதவி:
மேதிராம் விவசாயத்திற்காக கிணறு தோண்டியதாகவும், அதற்காக அரசிடம் கடன் வசதி பெற்றதாகவும் நம்மிடம் தெரிவித்தார். இதுக்குறித்து அவர் மேலும் கூறுகையில், ”எங்களின் ஒரே நீர்ப்பாசனம் கிணறுதான். வயல்களுக்குப் பாசனம் செய்வதற்காக Rahat Irrigation (விலங்குகளை பயன்படுத்தி நீர்ப்பாய்ச்சும் முறை) வழியாகத் தண்ணீரை எடுத்து வந்தோம். இந்த செயல்முறை சுமார் 8 நாட்கள் வரை எடுக்கும்."
பின்னர் அரசு எங்கள் வயல்களில் மின்சார வசதியை கொண்டு வந்ததாகவும், அதன் பிறகு நாங்கள் எங்கள் வயல்களில் குழாய் கிணறுகளை அமைக்க ஆரம்பித்தோம் என்றும் கூறினார். எனது பண்ணையில் கிணறு தோண்டுவதற்காக அப்போதைய காலத்தில் சுமார் 2600-2700 ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளேன்” என்றார்.
எங்கள் வீட்டில் பெரும்பாலும் ரொட்டி செய்வதில்லை என்றும், சில விசேஷ நாட்களில் மட்டுமே கோதுமை ரொட்டி தயாரிப்போம் என்றார் விவசாயி மேதிராம். இதற்குக் காரணம் கோதுமை எங்கள் பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுவதில்லை என்பது மட்டும் தான். இதுதவிர, தற்போது விவசாயிகள் மிகக்குறைவாக உளுந்து சாகுபடி செய்கின்றனர். ஏனெனில், நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், உளுந்து பயிரிட இப்பகுதி விவசாயிகள் மத்தியில் ஆர்வம் இருப்பதில்லை என்றார்.
மாற்றுப்பயிர்களை நம்பும் மேதிராம்:
தற்போது, மேதிராம் தனது வயலில் கரும்பு தவிர்த்து காய்கறிகள் உட்பட மற்ற பயிர்களையும் பயிரிட்டு வருகிறார். இவர் தனது வயலில் வெண்டைக்காய், புடலங்காய், சுரைக்காய், சோளம், சோளம், தினை ஆகியவற்றை பயிரிட்டுள்ளார். இது தவிர மற்ற பயிர்களையும் பருவத்திற்கு ஏற்ப தனது வயலில் நடுகிறார். தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வயலில் நெல் பயிரிடுவதில்லை என்றார்.
நேர்க்காணலின் இறுதியாக, ”விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகளை கைவிட்டு காலத்திற்கேற்ப மற்ற பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகள் லாபம் பார்க்க முடியும். இதுதவிர விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களே மதிப்புக்கூட்டு முறையில் தாங்களே தயாரித்து சந்தையில் விற்பனை செய்யதால் முழு பலனையும் பார்க்க முடியும்” என விவசாயி மேதிராம் தெரிவித்தார்.
Read more:
Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
பூசா பாஸ்மதி 1979- பூசா பாஸ்மதி 1985 அரிசி வகைகளின் விதை விற்பனை தொடக்கம்!
Share your comments